சில நேரங்களில் வளரிளம் பெண்கள் பள்ளி செல்லும் வழியில் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவது உண்டு. கேலிப் பேச்சு மூலமாக மன உளைச்சலுக்கு ஆளாதல், சக மாணவர்களால் காதலிக்கக் கட்டாயப்படுத்தப்படுதல் போன்ற வெளிப்படையாகச் சொல்ல முடியாத காரணங்களும் பள்ளியைப் புறக்கணிக்கக் காரணமாக இருக்கலாம். இந்த இடத்தில்தான் வளரிளம் பெண்ணுக்கும் தாய்க்குமான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.
ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி பள்ளியைப் புறக்கணிப்பதாகச் சொல்லிப் பெற்றோர் அழைத்து வந்தார்கள். பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி வந்துவிடுவதாகவும், அதனால் அடிக்கடி விடுப்பு எடுப்பதாகவும் காரணம் கூறினார்கள். பல முறை ஸ்கேன், மற்றப் பரிசோதனைகளை எடுத்துப் பார்த்ததில் வயிற்றுப் பகுதியில் எந்தத் தொந்தரவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்ததில், அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில்
ஒரு பையன் அடிக்கடி பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்வதாகவும், அதனால்தான் பள்ளிக்குப் போகவே பயமாக இருப்பதாகவும் கூறினாள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், அவள் பல முறை இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அம்மாவோ ‘நீ ரோட்டில் ஒழுங்காகச் சென்றால், யார் உன்னைத் தொந்தரவு செய்யப்போகிறார்கள்' என்று அந்தப் பெண்ணின் மீதே பழியைப் போட்டு, தட்டிக் கழித்துள்ளார்.
எனவே, பெற்றோர் நம்மைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, தங்களுக்கு நேரிடும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை வளரிளம் பெண்கள் தைரியமாகச் சொல்வார்கள். ஆரம்பக் கட்டத்திலேயே அதைச் சரியாகக் கையாளும்போது, பல பிரச்சினைகளைத் தடுத்துவிடலாம். இல்லையென்றால் மேற்கண்டதுபோல மனரீதியான பாதிப்புகள், உடல்ரீதியான பாதிப்புகளாக வெளிப்படும்.
No comments:
Post a Comment