Wednesday, 18 November 2015

பாலியல் பயணம் (பதின் பருவம் புதிர் பருவமா?)

‘செக்ஸ்’. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் காதை பொத்திக்கொண்டு ஓடுபவர்களும், ‘களுக்' என்று வாயை மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பவர்களுமே அதிகம். இதன் காரணமாகவே வளரிளம் பருவத்தினர் 'செக்ஸ்' என்பது பாவமான காரியம் என்றோ அல்லது கேலிக்குரிய செயல் என்றோ குழப்பத்தில் தத்தளிக்கின்றனர்.
உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனிதர்களுக்கு, இன்னும் பல நேரங்களில் புரியாத புதிராய் இருப்பது செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். அதிலும் இந்தியர்களுக்குப் பாலியல் குறித்த சந்தேகங்களும், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்களும் அதிகம்.
இதைத்தான் மனநலப் பேராசிரியர் ஒருவர் நகைச்சுவையாக இப்படிச் சொன்னார்: "ஆங்கிலேயர்கள் செக்ஸை இனப்பெருக்க உறுப்புகளில் (Genitals) வைத்து முடித்துவிடுவார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எப்போதும் மனதிலேயே (Mind) வைத்திருப்பார்கள்".
உளவியல் அடிப்படை
‘செக்ஸ் உணர்வு என்பது மனிதர்கள் குழந்தைகளாக
இருக்கும் போதே உருவாகிவிடுகிறது. ஆனால், அது வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகிறது' என்று உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். இப்படிச் சொன்ன தற்காகப் பல எதிர்ப்புகளை அவர் சம்பாதித்தார்.
அவருடைய கூற்றுப்படி பாலியல் உணர்வை ஒரு விதைக்குள் இருக்கும் மரத்தோடு ஒப்பிடலாம். ஊன்றப் பட்டதிலிருந்து மண்ணுக்குள்ளிருந்து வெளியே வரும்வரை வெளியில் தெரியாமல் இருக்கும். அந்த விதை செடியாக வளரும் பருவம் போலத்தான், விடலைப் பருவமும். பதிமூன்று வயதில்தான் பாலியல் உணர்வுகள் வெளிப்படையாகத் தோன்ற ஆரம்பிக்கும். சில வருடங்களில் அது தீவிரமடையும், பரிசோதித்துப் பார்க்க முயற்சி செய்யும்.
பாலியல் தேடல்
இந்த ஆர்வத்தில்தான் ‘குழந்தை எப்படிப் பிறக்கிறது?’ என்றும் ‘திருமணமன்று கழுத்தில் தாலி கட்டிவிட்டால் குழந்தை பிறந்துவிடுமா?’ என்றும் ஏடாகூடமான கேள்விகளைச் சில வளர் இளம்பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள். கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காதபட்சத்தில், அவர்களுடைய தேடல் ஆரம்பித்துவிடும்.
‘அய்யய்யோ... இந்தப் புள்ள இப்படியெல்லாம் பேசுதே!' ன்று பெற் றோர் கவலைப்படத் தேவையில்லை. மனிதனின் முக்கிய அடிப்படைத் தேவைகள் மூன்று. அந்த வகையில் உணவு, தூக்கத்துக்கு அடுத்துச் செக்ஸுக்கு மூன்றாவது இடம். அதனால்தான் பெரும்பாலான விடலைப் பருவத்தினர் தங்கள் ரகசியக் கேள்விகளுக்கான விடைகளை ராத்திரி 11 மணிக்கு மேல் டிவி சேனல்களிலோ, வலைதளங்களிலோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
எதிர்பாலின ஈர்ப்பு
கிட்டத்தட்ட 12 வயதுவரை பெண் குழந்தைகளுடன் உட்கார விரும்பாத ஆண் குழந்தைகள் ‘பதின்பருவ' வயதில் பெண் குழந்தைகளுடன் ஒன்றாக உட்கார ஆசைப்படுவார்கள். அதேபோல, ஆண் குழந்தைகளைப் போட்டியாளர்களாகப் பாவிக்கும் பெண் குழந்தைகள், பதின் பருவத்தில் ஆண் குழந்தைகளின் மீது கரிசனம் காட்டத் தொடங்குவார்கள்.
வளர் இளம்பருவத்தில் எதிர்பாலினத்தவருடன் பழக வேண்டும், நட்புகொள்ள வேண்டும் என்ற ஆசை அரும்புவிட ஆரம்பிக்கும். இதுவும் சமூகப் பழக்கங்களைக் கற்றுக்கொள்ள ஒருவகையில் உதவி செய்யும், இயற்கையின் உந்துதல்தான். இந்த ஈர்ப்பு, வளர் இளம்பருவத்தினர் மத்தி யில் காதலாக மாறவும் வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment