Wednesday, 18 November 2015

பாலியல் கல்வியில் பெற்றோரின் பங்கு (பதின் பருவம் புதிர் பருவமா?)

      
  • "இந்த வயதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் வருவது இயற்கைதான், நாங்களும் அதைக் கடந்துதான் வந்திருக்கிறோம்" என்று கூறி ‘தாங்கள் பெற்றோரால் புரிந்துகொள்ளப்படுகிறோம்’ என்ற உணர்வை விடலைப் பருவத்தினரிடம் ஏற்படுத்துங்கள்.
  • செக்ஸைப் பற்றி பேசித் தேவையில்லாமல் நாமாகவே அந்த எண்ணத்தை விதைத்துவிடுவோமோ என்ற பயம் வேண்டாம். அது இயல்பானது. அந்த வயதுக்குரியது.
  • வாரிசுகளின் சங்கோஜமான அல்லது முரண்பாடான கேள்விகளாலோ கருத்துகளாலோ கோபமோ பதற்றமோ அடையாதீர்கள். மாறாக "நீ இப்படி வெளிப்படையாகக் கேட்பது எனக்குப் பிடித்திருக்கிறது. பிரச்சினையைத் தீர்க்க இதுதான் முதல் படி" எனப் பாராட்டுங்கள்.
  • பாலியல் குழப்பங்கள், பாலியல் சார்ந்த வன்முறைகளால் ஏற்படும் மன உளைச்சல்கள், இளம் வயது கர்ப்பம், பால்வினை நோய்கள், சமூகரீதியான பாதிப்புகள் பற்றி உங்கள் வாரிசுகளுக்குத் தெளிவுபடுத்துங்கள். இது பிரச்சினைகளை மோசமடையாமல் தவிர்க்க உதவும்.
  • பாலியல் சம்பந்தப்பட்ட விளக்கங்களைத் தனி வகுப்புபோல் நடத்த வேண்டாம். அவ்வப்போதுக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாகச் சினிமாவில் பாலியல் சம்பந்தப்பட்ட கவுரவமான காட்சிகள் வரும்போது ‘இந்தக் காட்சியைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று ஆரம்பிக்கலாம். அல்லது ‘இப்படித்தான், நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு நண்பன் இதுபோன்ற பாலியல் குழப்பத்தில் மாட்டிக்கொண்டான்’ எனக் கற்பனையாகக்கூடச் சூழ்நிலையை உருவாக்கிப் பேச ஆரம்பிக்கலாம்.
  • எதிர்பாலினரிடம் பழகும்போது நல்ல தொடுதல் எது, தவறான நோக்கத்துடன் கூடிய தொடுதல் எது என்பதைத் தெளிவுபடுத்துங்கள். தவறு என்று தோன்றும் செயல்களுக்குத் தைரியமாக ‘நோ’ சொல்லக் கற்றுக்கொடுங்கள்.
  • சில நேரங்களில் தன்பாலின உறவு பற்றிய எண்ணங்களோ தொடுதல்களோ இந்த வயதில் வர வாய்ப்பு உண்டு என்பதையும், அது செக்ஸைத் தவிர்ப்பதற்கான மாற்றுவழி அல்ல என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.
  • மதரீதியான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் ‘செக்ஸ் என்பது ஒரு பாவச் செயல்’ என்று போதிப்பதைவிட, ‘செக்ஸ் என்பது கடவுள் தந்தவற்றுள் அற்புதமான, உன்னால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று’ என்று பேசுங்கள்.
  • உங்கள் கருத்துகளைத் திணிக்கும் களமாகப் பாலியல் கல்வியைப் பயன்படுத்தக் கூடாது. தங்கள் பாலியல் உணர்வு பெற்றோரால் தீர்மானிக்கப்படுகிறது என மகனோ / மகளோ நினைத்துவிட்டால் சகஜமாகப் பேச மாட்டார்கள்.
  • பாலியல் என்பது மறைமுகமாகவோ, குத்திக்காட்டியோ, மழுப்பலாகவோ பேச வேண்டிய விஷயம் அல்ல. தெளிவாக, வெளிப்படையாகப் பேசப்பட வேண்டியது. பெற்றோர் அதைப் பேசக் கூச்சப்பட்டால், வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.
  • கடைசியாக, ஆனால் முக்கியமாகப் பாலியல் குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment