Wednesday, 18 November 2015

ஈர இரவுகள் (பதின் பருவமா, புதிர் பருவமா- 7)


வளர் இளம்பருவத்தில் நுழைந்த புதிதில், பலருக்குச் செக்ஸ் சார்ந்த கனவுகள் வருவது சகஜம்தான். சில நேரம் தெரிந்த நபர்கள்கூட அந்தக் கனவுக் காட்சிகளில் வரலாம்.
ஒருமுறை 15 வயது மாணவர் ஒருவர், தனக்குப் பாலியல் ரீதியான கனவுகள் அடிக்கடி வருவதாகவும், அது அவருடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் பாவம் என்று கருதுவதாகவும் கூறினார். 'தான் மோசமானவனாக மாறிவிட்டேன்' என்ற குற்றவுணர்ச்சியே இதுபோன்ற பதற்றங்களுக்குக் காரணம். சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுகள் பற்றிய ஆராய்ச்சியின்படி, அன்றாடம் நிகழும் பல சம்பவங்களால் ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே கனவு. இது ஒரு பாதிப்பு இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈர இரவுகள்
'சொப்பன ஸ்கலிதம்' இளம் பருவத்தினருக்குச் சிம்மசொப்பனம். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையே மருத்துவர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால், இந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியே தொலைக்காட்சி, பத்திரிக்கை விளம்பரங்கள் மூலமாகப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனதைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிக் காசு பறித்து வருகின்றன பல கும்பல்கள்.
வளர் இளம்பருவத்தினர் எல்லோருக்கும் இந்த அனுபவம் சில முறையாவது
நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அவ்வப்போது அதிகாலை நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் விந்து தானாகவே வெளிப்படும் அல்லது செக்ஸ் கனவுகளின் விளைவாக வெளிப்படும். சிலருக்கு அதனுடன் சேர்ந்து உச்சகட்டத்தை அடைந்த உணர்வும் ஏற்படலாம். சில வேளைகளில் உடை நனைந்த உணர்வால் விழிக்கலாம். இந்த அனுபவம் முற்றிலும் சாதாரணமான ஒன்று. இதைக் குறித்துப் பயப்படவோ, கலக்கமடையவோ தேவையில்லை.
கிட்டத்தட்ட 13 வயது ஆரம்பிக்கும்போது தேவைப்படவில்லை என்றாலும் ஆண் குழந்தைகளின் விதைப்பைகள் விந்து உற்பத்தியைச் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. உதாரணமாக ஒரு மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை எடுத்துக்கொள்வோம். கீழே குழாய் திறக்கப்படவே இல்லை. ஆனால், தொட்டியில் தண்ணீர் மட்டும் நிரம்பிக்கொண்டேயிருந்தால், அந்தத் தண்ணீர் வெளியே நிரம்பி வழிவதைத் தவிர வேறு வழியே இல்லை. அதுபோலத்தான் பதின் பருவத்தில் அதிகமாக உற்பத்தியாகும் விந்து வெளியேறுவதற்கு, கனவு ஒரு வடிகாலாகப் பயன்படுகிறது.
சிறுநீரில் விந்து
‘ஒரு சொட்டு விந்து, 52 சொட்டு ரத்தத்துக்குச் சமம்’ என்ற முறையில்கூட விளம்பரங்கள் வருகின்றன. சில விடலைப்பருவத்தினர் சிறுநீர் கழிக்கும்போது அதில் விந்து வெளியேறுவதாகவும், அதனால் தங்கள் ‘சக்தி’ முழுக்க வீணாகி உடல் சோர்வு, நடுக்கம், தேக மெலிவு ஏற்படுவதாகவும் நம்புவார்கள். முற்றிய நிலையில் தங்களுடைய ஆணுறுப்பு சுருங்கிக் கொண்டே போய், வயிற்றின் அடியில் சென்றுவிட்டதாகவும் பிரமையில் புலம்புவார்கள். சில வேளைகளில் மனநோய்க்கும் ஆளாவார்கள்.
சிறுநீர் என்பது உடலின் கழிவுநீர். அதில் பல செல்கள், திசுக்கள், சிலநேரம் கிருமிகள் கலந்து வரலாம். இதனால் அதன் நிறம் மாறி விந்து வெளியேறுவதுபோலத் தோற்றமளிக்கலாம். அப்படியே வெளியேறினாலும்கூட, அது ஒன்றும் ரத்தத்துக்குரிய மாற்று அல்ல.

No comments:

Post a Comment