Wednesday, 18 November 2015

செக்ஸ் கல்வியின் தேவை (பதின் பருவம் புதிர் பருவமா?)

வயது ரீதியான சாதாரண உடல், மன மாற்றங்களைப் பற்றி அடிப்படைத் தெளிவுகூட இல்லாமல் விடலைப் பருவத்தினர் தொடர்ந்து உழன்றுகொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இன்மையும், வெளியில் சொல்ல வெட்கப்படுவதும்தான். சிறுநீரகத்தில் கல்லடைப்புக்கு எந்த மருத்துவரைப் பார்க்கலாம், என்ன செய்யலாம் என்று அது தொடர்பாகச் சிகிச்சை பெற்ற ஒருவரிடம் கேட்கலாம். ஆனால், பாலியல் சந்தேகங்களை யாரிடம் கேட்பது? பலருக்கும் இப்படிச் சந்தேகங்கள் நீண்டுகொண்டே போகும்.
கடைசியில் முறைசார்ந்த பயிற்சி பெற்ற மருத்துவருக்குப் பதிலாக, விளம்பரங்களால் கவரும் போலி மருத்துவர்களிடம் சரணடைந்து விடுவதுதான் பலரும் சென்றடையும் தவறான பாதையாக இருக்கிறது. வளர்இளம் பருவத்தினரிடம், பெற்றோர் நல்ல நண்பனைப்போல நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. நண்பர்கள் மற்றும் வலைதளங்கள்
பல நேரங்களில் அவர்களைத் தவறான பாதைக்கு வழிநடத்த அதிக வாய்ப்புண்டு.
பொது மருத்துவரிடம் வேறு ஏதாவது நோய்க்குச் சிகிச்சை பெறச் செல்லும்போது, சந்தேகம் நாக்கின் நுனிவரை வந்துவிடும். ஆனால், அவர் ஏதாவது தப்பாக நினைத்துவிடுவாரோ என்ற பயம். சில நேரம் நோய்க்கான காரணங்களை அறிய, இது குறித்துக் கேட்கத் தோன்றி, மருத்துவரும் கேட்காமல் விடலாம். இந்தத் தடைவேலி அறுக்கப்பட்டால்தான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
பாலுணர்வு வெட்கத்துக்குரியதா?
பத்தாம் வகுப்பில் உயிரியல் புத்தகத்தை வாங்கிய உடன், இனப்பெருக்க உறுப்புகளின் வரைபடங்களும் அது சம்பந்தப்பட்ட விளக்கங்களும் கடைசிப் பாடமாக இருந்தால்கூடப் பலரும் ஆர்வத்துடன் படித்து முடித்துவிடுவார்கள். வகுப்பில் காதல் சம்பந்தப்பட்ட இலக்கியம் பாடமாக நடத்தப்படும்போது மாணவர்களுக்குள்ளே நமுட்டுச் சிரிப்பும், குசுகுசு சத்தங்களும் கேட்கும்.
இத்தனை ஆர்வம் உள்ள விடலைப் பருவத்தினருக்கு, அதைப் பற்றித் தெளிவான கல்வி விளக்கங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. இதைப் பற்றிய பேச்சு என்றாலே சிலர் கூச்சமாகவும் வெட்கமாகவும் நினைக்கிறார்கள். மற்றொரு சாரார் இதைப் பற்றி பேசுவதே பாவம், தவறு என்று நினைக்கிறார்கள். ஏன், நோயாளிகளிடம் நோய் வரலாறு கேட்டு எழுதும் படிவத்தில் ‘செக்ஸுவல் ஹிஸ்ட்ரி’ என்ற பகுதியை, மருத்துவ மாணவர்கள்கூட எழுதாமல் விட்டுவிடுகிறார்கள்.
கல்வியின் அவசியம்
பாலியல் குறித்த இத்தனை பிரச்சினைகள் நிலவிவரும் நிலையில், பள்ளி சார்ந்த பாலியல் விழிப்புணர்வுக் கல்வி பாலியல் சார்ந்த புரிதலில் பெரிய மாற்றங்களை நிகழ்த்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சமூக ரீதியான குழுக்களில் தங்களை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளும் விடலைப் பருவத்தினர் மத்தியில், இளம்வயதில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் மற்றும் கர்ப்பம் போன்றவை பெருமளவு குறைந்திருப்பதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஐந்து வருடங்களில் உலக மக்களின் ஆரோக்கிய வாழ்வைத் தீர்மானிக்கும் பத்து முக்கியக் காரணிகளுள் ஒன்றாக, வளர்இளம் பருவத்தில் ‘நிதானமான மற்றும் ஆரோக்கியமான பாலியல் அணுகுமுறைகள்’ என்ற கருத்து முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. எனவே பெற்றோர், அரசு, கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் இதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு செயல் பட வேண்டிய அவசியம் உள்ளது

No comments:

Post a Comment