Wednesday, 18 November 2015

ஹார்மோன்களின் விளையாட்டு-(பதின் பருவம் புதிர் பருவமா- 6)




                 ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன், புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்களும் செய்யும் வேலையால் உடலிலும் மனதிலும் பலவிதமான பாலியல் ரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
பையன்களுக்கு மீசை மற்றும் உடலில் ரோம வளர்ச்சியும், பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, உடல் வடிவங்களில் மாற்றம் மற்றும் மாதவிடாய் ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில் நுழைவதற்கான லைசென்ஸ் என்றே கருதலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மட்டுமல்ல, உடல் மற்றும் பாலியல் வளர்ச்சியிலும் முதலிடம் பெண்களுக்குத்தான். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வளர்ச்சி வேகமடைவதும் விடலைப்பருவம்தான்.
ஒப்பிடுதல்
ஆணுறுப்பு வளரும் இந்த நேரத்தில்தான் பையன்களுக்குப் பல சந்தேகங்கள் வரும். நண்பர்களுடன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவதால் ஆணுறுப்பின் வளர்ச்சியைக் குறித்த பயம்
ஏற்படும். பாலியல் மீதான எதிர்பார்ப்பு கூடுவதற்கு ஏற்ப, ஆணுறுப்பின் வளர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். பள்ளியில் சிறுநீர் கழிக்கும்போது நண்பர்களின் ஆணுறுப்பின் அளவை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக எட்டிப்பார்க்கவும் கூச்சப்பட மாட்டார்கள்.
தங்கள் ஆணுறுப்பு சிறிதாக இருக்கிறது என்று தோன்றுகிற பட்சத்தில், மொத்தப் பாலியல் வாழ்க்கையுமே பாழாகிப்போனது போன்ற கவலை அவர்களைத் தொற்றிக் கொள்ளும். போதாக்குறைக்குப் புத்தகங்களிலும் வலைதளங்களிலும் வரும் ‘இந்தக் கிரீமை உபயோகித்தால் பல சென்டிமீட்டர் அளவுக்குக் கூட்டலாம்’ என்பது போன்ற விளம்பரங்கள் வேறு, அவர்களை அதிகப் பதற்றமடைய வைக்கும். ஆனால், ஆணுறுப்பின் அளவுக்கும் பாலியல் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் மருத்துவரீதியில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை.
மார்பக வளர்ச்சி
ஆண்களுக்கு ஆணுறுப்பைப்போல, பெண்களுக்கு மார்பக வளர்ச்சியில் பல சந்தேகங்களும் பயங்களும் தோன்றும். மார்பக வளர்ச்சி குறித்துத் தோழிகளுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துப் பதற்றமடைவதும் இயற்கை. தாயிடம் இருக்கும் நல்ல உறவு, அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்க உதவும்.
மாதவிடாய் குறித்த பயம், அது வரும் நாட்களில் உடல், மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆலோசனை பெறுவது மிக அவசியம். சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் ஐந்து நாட்கள் அதிகப் பதற்றம், தூக்கமின்மை, மார்பு கனமாகத் தோன்றுதல், எரிச்சல்தன்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு premenstrual syndrome என்று பெயர். இதைச் சமாளிக்க ஆரோக்கியமான உணவு, போதிய ஓய்வுடன் சிலநேரம் மாத்திரைகளின் உதவியும் தேவைப்படலாம்.

No comments:

Post a Comment