எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், இது பற்றிய சந்தேகமும் பயமும் இளம்பருவத்தினரை எப்போதும் தொற்றிக்கொண்டே இருக்கும் வேதாளம் போன்றது. சுயஇன்பம், சுயமைதுனம், கைப்பழக்கம் எனப் பல பெயர்களைக் கொண்ட இந்தப் பழக்கத்துக்கு, ஆங்கிலத்தில் மாஸ்ட்ருபேஷன் (Masturbation) என்று பெயர்.
இந்தப் பழக்கம் மூன்று வயது சிறுவர்களிடம்கூட, வளர்ச்சியின் ஓர் அங்கமாகக் காணப்படும் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று வயதில்தான் ஒரு குழந்தைக்குத் தான் ஆணா, பெண்ணா என்ற வேறுபாடு புரிய ஆரம்பிக்கும். இன்பம் பெறுவது நோக்கமாக இல்லாவிட்டாலும் குழந்தைகள் அடிக்கடி தங்கள் பாலுறுப்பைத் தூண்டுவது இயற்கையான ஒன்று. இது காலப்போக்கில் மாறிவிடும்.
முதல் அறிமுகம்
இந்தப் பழக்கம் பெரும்பாலும் நண்பர்களின் மூலமாக அறிமுகமாகிறது. ஆய்வு முடிவுகளின்படி 13-14 வயதுக்குள் இரு பாலினத்தவருமே இதைப் பற்றிய தேடல் ஆரம்பித்து விடுவதுடன், முதல் அனுபவத்தையும் பெற்றுவிடுகிறார்கள்.
வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆண்களும், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்களும் சுயஇன்பம்
பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 சதவீதம் பேர், அதைத் தொடர்ச்சியாகவும் செய்கிறார்கள். விடலைப்பையன்கள் இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு, பெண் குழந்தைகள் சொல்வதில்லை.
கொல்லும் குற்றஉணர்வு
சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும், தனிப்பட்ட நபர்களின் கருத்துகள் சுயஇன்பத்தை வெவ்வேறு கோணங்களில் பார்க்கின்றன. ஆனால் உடலியக்கவியல் ரீதியாகவும், மனநல ரீதியாகவும் இந்தப் பழக்கம் விடலைப்பருவத்தின் கடந்து செல்லும் நிலைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு பார்வைகளுக்கு நடுவே வளர் இளம்பருவத்தினர் சிக்கிக்கொள்வதால்தான், அவர்கள் எளிதில் குற்றஉணர்வுக்கு ஆளாகின்றனர். நண்பர்கள் வட்டத்திலேயே இதைப் பற்றிய மாறுபட்ட கருத்துகள் நிலவுவது, அவர்களுக்குப் பயத்தை உருவாக்குகிறது.
செய்தே ஆகவேண்டும் என்ற உந்துதல், செய்தால் அதைப் பற்றிய குற்றஉணர்வு என்ற இந்த இரண்டு மனநிலைகளுக்கு இடையில் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கும் வளர் இளம்பருவத்தினரை நேரம் பார்த்துத் தாக்க இன்னொரு கூட்டமும் காத்திருக்கிறது.
தவறான போதனைகள்
கொசு கடிப்பதால்தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் கூற்றை நம்பும் நம்மவர்கள், சுயஇன்பப் பழக்கத்தைப் பொறுத்து மட்டும் அறிவியலுக்குப் புறம்பான விளக்கங்களையும் வைத்தியங்களையும் நாடிச்செல்லும் நிலை உள்ளது.
தொலைக்காட்சி, வார இதழ்களில் வெளியாகும் விளம்பரங்களும் இவர்களை வேட்டையாடிவிடுகின்றன. சுயஇன்பத்தால் உறுப்பு சுருங்கிப்போவதாகவும், நரம்புத்தளர்ச்சி ஏற்படுவதாகவும், விந்து நீர்த்துப் பின்பு ஆண்மைக் குறைவு ஏற்படுவதாகவும் விளம்பரங்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளை நம்பிப் பணத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் தொலைத்த இளம்பருவத்தினர் ஏராளம்.
குற்றஉணர்வுதான் எல்லா மனநலப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று அறிவியல் உலகம் கூவிக்கொண்டிருக்கிறது. ஆனால், 'அப்படியாகும்', 'இப்படியாகும்' என்ற பயத்தையும், குற்றஉணர்வையும் ஏற்படுத்திப் பிரச்சினைகளைப் பெரிதாக்கும் ஆதாரமற்ற வைத்தியங்களைத் தவிர்ப்பதுதான் விடலைப்பருவத்தினருக்கு நல்லது.
எது பாதிப்பு?
‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி சுயஇன்பத்துக்கும் பொருந்தும். ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுயஇன்பத்துக்கு தீனிபோடும் பழக்கம். சுயஇன்பம் செய்வதற்காக முக்கிய வேலைகளைப் புறக்கணித்தல், மற்ற விஷயங்களில் கவனம் குவிக்க முடியாமை போன்றவை, இந்தப் பழக்கத்துக்கு அடிமையாக மாற்றும் அறிகுறிகள்.
சுயஇன்பம் நல்லதா, கெட்டதா என ஆராய்ச்சி செய்வதைவிட, அதைக் கைவிட்டு வெளியேற முயற்சிப்பதே நல்லது. அது அளவுக்கு மீறி செல்லும்போது சுயகட்டுப்பாட்டை பாதிப்பதுடன், சுயஇன்பத்துக்கு அடிமையானால் திருமணமான பின்பும்கூட வாழ்க்கைத்துணையுடனான பாலியல் உறவுகளைவிட சுய இன்பத்திலேயே அதிக நாட்டம் செல்லலாம். அப்போது குடும்ப உறவில் பல பாதிப்புகளை ஏற்பட வாய்ப்புள்ளது.
எப்படி தவிர்க்கலாம்?
- தனிமையைத் தவிர்ப்பது
- பிரச்சனைக்குரிய நேரங்களில் பிஸியாக இருக்கும்படி அமைத்துக்கொள்ளுங்கள்
- சந்தோஷம் தரும் மாற்று வழிகளில் ஈடுபாட்டை அதிகரித்துக்கொள்வது
- நல்ல புத்தகங்களை வாசிப்பது
- இசையில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்வது
- விளையாட நேரம் செலவழிப்பது
- ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது
- குற்ற உணர்ச்சியை தவிர்ப்பது
- உங்களை புரிந்துகொள்ளும் மூத்த நபர்களிடம் இது பற்றி வெளிப்படையாக பேசுங்கள்
- தோல்வியடையும் சில தருணங்களால் சோர்ந்து போகாமல், தீர்க்கமான முடிவோடு இருங்கள்
No comments:
Post a Comment