பள்ளிமாணவிகள் தேர்வு முடிந்ததை கொண்டாடும்
விதமாக ஒன்றுசேர்ந்து மதுஅருந்துவது போன்ற படங்கள் சமீபத்தில் சமூகவலைதளங்களில்
வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வளர்இளம் பெண்கள் போதைப்பொருட்களை
உபயோகிப்பது கணிசமாக அதிகரித்திருந்தாலும், ஆண்களிடமிருந்து அவர்களை
வித்தியாசப்படுத்துவது ஒரே விஷயம் தான். வளர்இளம் பெண்கள் போதைப்பொருட்களை
கூட்டமாக, கொண்டாட்டங்களின் போது மட்டும் தான் அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள்.
இன்னும் சில சமூகரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
ஆண்களைப் போல தனிமையில் போதை சுகத்திற்காக மட்டும் உபயோகப்படுத்தும் பழக்கம் அதிக
அளவில் இன்னும் வரவில்லை. ஆனால் அதைநோக்கி முன்னேறி சென்றுகொண்டிருப்பது
அதிர்ச்சியான செய்தி தான்..
வளர்இளம் பெண்களின் போதைப்பழக்கத்திற்கும்
இளவயது கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களுக்கும் நேரடிதொடர்பு இருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பெண்கள் 100 மில்லி லிட்டர் குடிப்பது ஆண்கள்
300 மில்லி லிட்டர் குடிப்பதற்கு சமம். அத்தனை எளிதில் ஆண்களை விட எளிதில்
போதைக்கு அடிமையாகும் அளவிற்கு அவர்களின் நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. மேலும் ஆண்களை ஒப்பிடும்போது மது அருந்தும் பெண்கள் வெகு சீக்கிரத்திலேயே கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கர்ப்ப காலத்தில் மது அருந்துவது வளரும் சிசுவின் வளர்ச்சியை பாதிப்பது மட்டுமல்லாமல், மனவளர்ச்சி குறைபாடோடு பிறக்கவும் வாய்ப்புள்ளது. எனவே
பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளை மட்டும் கண்காணித்தால் போதும், பெண்பிள்ளைகளை
பாதுகாத்தால் மட்டும் போதும் என்று இருந்துவிடுவது நல்லதல்ல.