நட்பு வட்டம்
பெரும்பாலான இளம்பருவத்தினருக்கு
போதைப்பழக்கங்களின் அறிமுகம் நண்பர்கள் மூலம் தான் கிடைக்கிறது. அவர்களின் உற்சாக
தூண்டுதல்கள், போதைப்பொருள்களைப் பற்றிய தவறான வழிகாட்டுதல் போன்றவை ஒருமுறை
முயற்சிசெய்து பார்த்தால் தான் என்ன, என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில்
நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாட ஆரம்பிக்கும் இந்த பழக்கம்,
நாளடைவில் எல்லா சூழ்நிலைகளிலும் எடுக்கும் அளவுக்கு கொண்டுபோய்விடும். பின்பு
குடிப்பதற்கென்றே அவர்களாகவே சூழ்நிலைகளை ஏற்படுத்தி, அதை குடிப்பதற்கு
சாக்குபோக்காக மாற்றிக்கொள்ளும் மனநிலை எற்படும். மனதிற்கு உற்சாகம் இல்லாத நேரங்கள் மற்றும் தோல்விகளால்
துவண்டு இருக்கும் நேரங்களில் “சரக்கு அடிச்சா உன் கவலையெல்லாம் பறந்து
போய்விடும்” என்று நண்பர்கள் தூண்டுவது பலருக்கு போதைப்பழக்கத்தின் முதல்படியாக
அமைந்துவிடும். எனவே இதுபோன்ற
ஆபத்தான உபதேசங்களுக்கு வளர்இளம் பருவத்தினர்
எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெற்றோர்களும் இவர்களின் தனிமை,தோல்வி, விரக்தியான
சமயங்களில் ஆதரவாக இருந்தால் இதுபோன்ற ஆபத்தான உபதேசங்களுக்கு இளம்பருவத்தினர்
செவிசாய்ப்பதை தடுக்கலாம்.
ஆபத்தான தனிமை
பள்ளிப்பருவத்தில் தப்பிவரும் பெரும்பாலான
வளர்இளம் பருவத்தினர் கல்லூரிக்குள் நுழையும்போதுதான் அடுத்தகட்ட ஆபத்தான
சூழ்நிலைக்கு நுழைகின்றனர். அதுவரைக்கும் உள்ளூரிலேயே பள்ளிப்படிப்பை
முடித்திருப்பார்கள், பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருப்பார்கள். ஆனால்
கல்லூரி படிப்பை வெளியூர்களில் தொடரவேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்போது அவர்களை
போதைப்பழக்கங்களுக்கும், காதல் மயக்கத்திற்கும் உள்ளாக்கும் காரணங்கள் பெற்றோரின்
நேரடி கண்காணிப்பு இல்லாதது, முழு சுதந்திரம் மற்றும் ஆங்கிலத்தில் அனானிமிட்டி (Anonymity) என்று சொல்லப்படும் யாரும் நம்மை அறிந்திருக்க
வாய்ப்பில்லை என்ற தைரியமும் தான்.
எனவே பெற்றோர் பிள்ளைகள் கல்லூரிக்கு
சென்றுவிட்டாலும் அவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு வீட்டிலிருக்கிற உணர்வை
ஏற்படுத்த வேண்டும். தாங்கள் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும்
வெளிப்படுத்த வேண்டும். அடிக்கடி அவர்களின் ஆசிரியர்களை தொடர்புகொண்டு அவர்களின்
கல்வி மற்றும் ஒழுக்கங்கள் குறித்த நிலமையை அறிந்துகொள்ள வேண்டும். தூரமாக
இருப்பின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி இருக்கும் ஊரில் வசிக்கும் குடும்ப
நண்பர்கள் அல்லது உறவினர்களை பொறுப்பாக நியமிக்கலாம். அவர்களின் நலனில் அக்கறை
உள்ள, நெருங்கிய நண்பர்களோடு பெற்றோரும் நல்ல உறவை வளர்த்துக்கொள்வது பலநேரங்களில்
உதவியாக இருக்கும். தேவைக்கு மீறிய பணப்புழக்கம் இவர்கள் கையில் இருப்பதை
தவிர்க்கலாம். எப்போதாவது ஒருமுறை தான் ஊருக்கு வர வாய்ப்பிருந்தால் வங்கிகளில்
பணத்தை போட்டு கொடுத்து ஏடிஎம் பரிமாற்றங்களை கண்காணித்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment