Friday, 3 June 2016

வலைவிரிக்கும் வலைதளம் (Signs of Internet addiction)


“என் பையனுக்கு மொபைல் போன்ல உள்ள எல்லா அப்ளிக்கேசனும் அத்துப்படி”, “மூணு வயசுலேயே எல்லா கேம்ஸையும் இன்டர்நெட்டை ஆன் பண்ணி அவனாகவே டவுன்லோட் செஞ்சிருவான்”, “பேஸ்புக்குல இப்பவே அவனுக்கு 200 ப்ரெண்ட்ஸ் இருக்காங்க தெரியுமா?” என்று மெய்சிலிர்த்துக்கொள்ளும் பெற்றோர்கள் பலர் சில வருடங்கள் கழித்து பள்ளி ஆசிரியரிடமோ அல்லது மருத்துவரிடமோ “24 மணிநேரமும் நெட்லயே இருக்கான், ஸ்கூலுக்கு போகமாட்டேனு அடம்பிடிக்கிறான், ஸ்மார்ட்போன் வாங்கி குடுத்து மாசாமாசம் டேட்டா ரீசார்ஜ் பண்ணலனா காலேஜ் போகமாட்டேனு சொல்லி வீட்டுல உள்ள பொருள்களை எல்லாம் உடைக்கிறான்” என்ற புகாருடன் வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இன்டர்நெட் போதை
இன்டர்நெட் அடிமைத்தனத்தை (Internet addiction) பற்றி மருத்துவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது ‘என்ன பாஸ் நீங்க, எதை எடுத்தாலும் அடிமைத்தனம்னு சொல்றீங்க, மனநல பாதிப்புனு சொல்றீங்க, அதனால எத்தனை நல்ல விசயங்கள் இருக்கு, நாங்க என்னதான் பண்றது’ என்று கேட்டார்.
அவர் கேட்டதில் நியாயம் இருக்கத்தான் செய்தது. வலைதளம் என்பது சமீபகாலமாக மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது உண்மைதான். டிக்கட் புக் செய்வதிலிருந்து வரன் பார்ப்பது வரை பல அன்றாட தேவைகளுக்கு இணையதளம் மற்றும் மொபைல்போன் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆனால் நம் கண்களை மறைக்கும் விசயமாக, பலரின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாகவும் இது மாறிவருவது பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். பெரும்பாலானோர் குடிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மது போதைவஸ்து இல்லை என்று சொல்லிவிட முடியாதே?


எது இணையதள அடிமைத்தனம்?
இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போனை கல்வி, தொழில் போன்ற அன்றாட உபயோகிப்பது அடிமைத்தனம் அல்ல. ஆனால் அதைத்தவிர மற்ற நேரங்களில் உபயோகிப்பது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஒருவர் வலைதளத்திற்கு அடிமையானதாக எடுத்துக்கொள்ளலாம் 
  • நாளுக்கு நாள் இணையதளம் (பேஸ்புக், வாட்ஸ் அப் உட்பட)உபயோகிக்கும் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்லுதல்
  • ஆரம்பத்தில் தீர்மானித்த நேரத்தை விட அதிகநேரம் சென்றபின்னும் கட்டுப்படுத்த முடியாத தன்மை
  • அதிக நேரம் செலவழித்தால் தான் திருப்தி என்ற தன்மை அல்லது ஒரு அப்ளிக்கேசனையோ, மொபைல்போன், லேப்டாப், டேப்களை திருப்தியில்லாமல் அடிக்கடி வலைதள உபயோகத்திற்காக மாற்றிக்கொண்டே இருப்பது
  • வலைதளத்தில் நேரம் விரயமாவதால் படிப்பு, விளையாட்டு, பிறருடன் நேரடியாக செலவிடும் நேரம் உட்பட மற்ற முக்கிய வேலைகளை புறக்கணிக்க ஆரம்பிப்பது
  • பெற்றோரிடம் இன்டர்நெட் உபயோகத்தைப் பற்றிய தகவல்களை மறைப்பது அல்லது பொய் சொல்வது
  • அன்றாடவாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது தெரிந்தும் விட முடியாத நிலை
  • இணையதள தொடர்பு மற்றும் மொபைல்போன் இல்லாமல் ஒருநாள் இருந்தாலும் எதையோ பறிகொடுத்த உணர்வு, எரிச்சல் மற்றும் கோபம், மன உளைச்சல், தூக்கமின்மை, பதற்ற உணர்வு, உடல் மற்றும் மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவது
  • படிப்பு உட்பட வாழ்க்கையின் மற்ற பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு வடிகாலாக வலைதள செயல்பாடுகளை அணுகுவது

பிரச்சனையின் தீவிரம்

புள்ளிவிபரங்களின்படி அமெரிக்காவில் 8-18 வயதுக்கு உட்பட்ட இளம்பருவத்தினரில் 23% பேர் இண்டர்நெட் அல்லது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். சீனாவில் 13% வளர் இளம்பருவத்தியனர் இணையதள அடிமைகளாக உள்ளனர். இந்தியாவிலும் இந்த புள்ளிவிபரங்கள் மேற்கத்திய நாடுகளோடு ஒத்துப்போவது மட்டுமல்லாமல், வலைதளத்தை பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடாக சீனாவுக்கு அடுத்து உருவெடுத்து வருவது பெருமைக்குரிய விஷயம் மட்டுமல்ல, முன் எச்சரிக்கையோடு அணுகவேண்டிய விஷயமும் கூட. தென்கொரியாவில் ஒரு கருத்துக்கணிப்பின்படி சுமார் 2% சிறார்கள் மருத்துவமனையில் அனுமதித்து மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வலைதளம் மற்றும் கணிணிகளுக்கு(ஸ்மார்ட்போன் உட்பட) அடிமையாக மாறியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி. இத்தனை விரிவாக சொல்வதற்கு காரணம் ‘மொபைல்போன், இண்டர்நெட் அப்படி என்ன செய்துவிடும்’ என்று மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான்.

No comments:

Post a Comment