Monday, 27 June 2016

போதைப்பழக்கம்-குடும்பவியாதியா? (Alcohol addiction-Role of family)


      ‘இளமையில் கல்’ என்பதை ‘இளமையில் கள்’ என நம் இளைஞர்கள் புரிந்துகொண்டார்கள் போலும். இளைஞர்கள் குடிக்க ஆரம்பிக்கும் சராசரிவயது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது மிகவும் ஆபத்தான விஷயமும் கூட. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் முதல் ஆரம்பித்து கஞ்சா, ஹெராயின் உட்பட பலவகையான போதைப் பழக்கவழக்கங்கள் வளர் இளம்பருவத்தினரிடையே நிலவிவருகிறது. இந்த போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தால் மட்டும் ஏற்படுவது அல்ல. நாம் சாப்பிடும் மிக்சர் போல குடும்பச்சூழல், சமுதாயம், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி, தனிப்பட்ட குணநலங்கள் மற்றும் மரபணு மாற்றங்கள் ஆகியவை சேர்ந்த கலவைதான் ஒருவரின் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகும் தன்மையை தீர்மானிக்கிறது.
குடும்பச்சூழல்
 ஒரு குழந்தை வளரும்போது நல்ல குடும்பச்சூழல் தான் ஆரோக்கியமான மனநல வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. வளர்இளம் பருவத்தில் தான் ஒருவரின் குணநலங்கள் முதிர்ச்சி அடைய
ஆரம்பித்து வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். ஆராய்ச்சி முடிவுகளின்படி சிறுவயதில் பெற்றோரில் ஒருவரை இழத்தல், குடும்பவன்முறைகளை கண்கூடாக பார்ப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கியநிலை, அதிகப்படியான குடும்பநபர்கள் எண்ணிக்கை போன்றவை இளம் வயதில் போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு சாதகமான குடும்ப சூழல்கள் என நிருபிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரின் பங்கு
தீவிரமான போதை அடிமைத்தனத்திற்கு உட்படும் நபர்களில் 80% பேரின் தந்தை அதே போன்ற போதைபழக்கத்திற்கு அடிமையாக இருந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வளரும் பிள்ளைகளுக்கு முதல் மாடல் பெற்றோர்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்பா தினமும் போதையில் வருவதையே பார்த்து வளரும் சிறுவனுக்கு, தானும் குடித்தால் தவறில்லை என்ற எண்ணம் வருவது இயற்கைதானே.
ஒரு விலங்கைக்கூட திரும்ப திரும்ப அடித்தால், ஒன்று வாலை சுருட்டிக்கொண்டு ஓடிவிடும் அல்லது எதிர்க்கத் தொடங்கும். மனிதனின் கற்றுக்கொள்ளுதலும் அப்படித்தான். பெற்றோரின் போதைப்பழக்கத்தின் சூழலில் வளரும் வளர்இளம் பருவத்தினர், ஒன்று தாங்களும் போதைப்பழக்கத்திற்கு உள்ளாவார்கள் அல்லது அவர்களின் எதிர்ப்பு குணரீதியான, ஆக்ரோஷமான நடவடிக்கை மாற்றங்களாக, படிப்பில் பின்தங்குதல் போன்றவைகளாக வெளிப்படும்.
பரம்பரை வியாதியா?

“அப்படியே ஆள் பாக்கிறதுக்கு மட்டுமல்ல, குணமும் அப்பாவை மாதிரியே அச்சுஅசலாக இருக்கிறது” என்று குழந்தைகளை கொஞ்சுவதுண்டு. இது உருவ ஒற்றுமைக்கு மட்டுமல்ல, போதைப்பழக்கத்திற்கும் பொருந்தும். மரபணுக்கள் மூலமாகவும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகும் தன்மை பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு செல்வதால் சிலருக்கு இது பரம்பரை நோயாகவே அமைந்துவிடுகிறது. வளர்இளம் பருவத்திலேயே போதைப்பழக்கத்தை ஆரம்பிக்கும் நபர்கள் பெரும்பாலும் இந்த மரபணு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பிருப்பதாக குளோனிங்கர் என்ற மனநல மருத்துவர் நிருபித்திருக்கிறார். ‘அப்படியானால் அப்பா குடிகாரராக இருந்தால் மகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுக்க முடியாதா?’ என்ற கேள்வி நமக்கு தோன்றும். இங்குதான் வளரும் சூழ்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. மரபணுக்கள் 60% வரை இதை தீர்மானித்தாலும் ஆதரவான குடும்ப, சமுதாய சூழல்கள், கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் இருக்கும் பட்சத்தில் இதை தடுக்கமுடியும். 

No comments:

Post a Comment