நாம் பயன்படுத்தும் பென்சில் மிகவும் பயனுள்ள
ஒரு பொருளாக இருந்தாலும், அவைகளை உருவாக்க ஒரு மரம் பலியாகி உள்ளது என்பதை மறுக்க
இயலாது. அது போலத்தான் தகவல் தொழில்நுட்பத்தில் வரும் புதிய கண்டுபிடிப்புகளினால்
பல நன்மைகள் இருந்தாலும், சில தீமைகள் இல்லாமல் இல்லை.
மீம்ஸ் கலாச்சாரம் ( Memes )
ஒரு படத்தை அல்லது ஒருவரின் கருத்தை, நகைச்சுவை உணர்வை கலந்து வலைதளங்களில் பிறரோடு
பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தான் மீம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில்
நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்ட இது இன்று பிறரை கேலிசெய்யவும், மனதைப்
புண்படுத்தவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது ஒரு ஆரோக்கியமற்ற சமூக சூழலை
உருவாக்கிவருகிறது. ஒரு தனிநபரையோ, அரசியல் தலைவரையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ
இன்று இதன் மூலம் உலகம் அறிய தாக்குவது மிகவும் எளிது. மேலும் இதன் மூலம் ஒரு
தரமான,நல்ல கருத்தை நீர்த்துபோகவும் செய்யலாம் .அல்லது விவாதத்திற்கே தகுதியில்லாத
ஒரு விஷயத்தை மிக முக்கியமான கருத்தாக எல்லோர் கண்களுக்கும் பூதாகரப்படுத்தி
காண்பிக்கும் மாயக்கண்ணாடியாக கூட இதை பயன்படுத்தலாம்.
பாதிப்பின் தீவிரம்
வள்ளுவர் சொன்ன ‘நாவினால் சுட்ட வடு’ கூட
சிலகாலங்களில் ஆறிப்போகலாம். ஆனால் இது போன்ற சமூகவலைதள தாக்குதல்களின்
சிறப்பம்சம்
என்னவென்றால், ஒருவரைப் பற்றிய தவறான அல்லது ஆபாசமான கருத்துக்கள்
ஒருமுறை உருவாக்கப்பட்டு விட்டால் அதை அழிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஆயுசுகாலம்
முழுக்க வலைதளங்களில் சுற்றி சுற்றி வந்து மனரீதியாக நிரந்தர காயத்தை ஏற்படுத்தும்
விஷயமாகிவிடும். இது சம்பந்தப்பட்ட நபருக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன்
சிலநேரங்களில் தற்கொலை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு விபரீதமாகிவிடும். மேலும்
யார் எந்த பதிவை வெளியிட்டாலும் அதை லைக் போடுவதற்கும், தர்க்கத்திற்கு
எடுத்துக்கொள்வதற்கென்று ஒரு கூட்டம் இருப்பதால், தங்கள் பதிவுகள் மிகுந்த
வரவேற்பை பெறுவதாக ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நேரம்
விரயமாவதுடன், அடிக்கடி மொபைல்போனை சோதித்துப்பார்க்க வேண்டும் என்ற
எண்ணசுழற்ச்சியும் ஏற்படுகிறது.
பாதுகாப்பற்ற உலகம்
தகவல் தொழில்நுட்பம் பல சவுகரியங்களை தந்து
காலத்தை சுருக்கிக்கொள்ள உதவினாலும், சில நேரங்களில் இந்த உலகத்தை பாதுகாப்பற்ற
ஒரு கூண்டாக நாம் பார்க்கும் அளவுக்கு நம் கண்ணோட்டத்தை மாற்ற வாய்ப்புண்டு.
ஏனென்றால் நாம் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் கண்காணிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறோம், நம்முடைய படுக்கை அறைகூட பாதுகாப்பாக தோன்றுவதில்லை. சமூக வலைதளங்களில்
வரும் எச்சரிக்கைகள் நம்மை பதற்றப்பட வைக்கிறது, சந்தேக கண்ணோட்டத்தை
அதிகரிக்கிறது எல்லா வாழ்க்கை சூழ்நிலைகளையும் பயத்தோடு அணுகும் அளவிற்கு நம்மை
பாதிக்கின்றது.
அமெரிக்க மனநல மருத்துவரான நார்மன் கேமரான்,
ஒருவருக்கு மனச்சிதைவை மற்றும் பிறழ்வை (Delusion)
ஏற்படுத்தக்கூடிய பல சமுதாய சூழல்களை வரிசைபடுத்தி கூறினார். ‘அதிகப்படியான
சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் சமூக சூழல் அல்லது ஒருவர்
தன்னை சுற்றிலும் ஏதோவொரு மாயவலை பின்னப்பட்டதாக உணரும் சமூக சூழ்நிலை ஆகியவை
ஒருவருக்கு மனச்சிதைவை உண்டுபண்ணும் அளவிற்கு சக்திவாய்ந்தது’ என்ற அவரது கருத்து
கவனிக்கத்தக்கது.
தொற்றுநோயா?
டெலூசன் (Delusion) என்பதற்கு
நடக்காத ஒரு விஷயத்தை, அது உண்மையில் தனக்கு எதிராக நடந்து கொண்டிருப்பதாக
தீர்க்கமான எண்ணம் கொண்டிருப்பது என்று அர்த்தம். முன்பெல்லாம் மனச்சிதைவு (schizophrenia) நோயாளிகள் யாரோ தனக்கு செய்வினை வைத்து விட்டதாகவோ
அல்லது வேறு கிரகத்திலிருந்து தன்னை யாரோ கட்டுப்படுத்துவதாகவோ தான் சொல்வார்கள்.
ஆனால் சமீபத்தில் நான் பரிசோதித்த ஒரு படிப்பறிவில்லாத கிராமத்து பெரியவர், அந்த
ஊரில் உள்ள இளைஞர்கள் தன்னை வாட்ஸ்அப் மூலமாக கட்டுப்படுத்தி, வாய்ஸ்மெயில் மூலமாக
மிரட்டுவதாகச் சொன்னது மிகுந்த ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும். உண்மையில்
அப்படியென்றால் அவருக்கு என்னவென்றே தெரியவில்லை. மனரீதியாக மட்டுமல்ல, மனநோயின்
தன்மையையே சமூகவலைதளங்கள் பாதிக்க ஆரம்பித்துவிட்டதற்கு இது ஒரு ‘சோற்று பதம்’
தான். மொத்தத்தில் வலிமையான ஆயுதத்தை ஆக்கத்திற்கு உபயோகிப்பதா, அழிவுக்கு
உபயோகிப்பதா என்பது நம் கையில் தான் இருக்கிறது
No comments:
Post a Comment