வளர் இளம்பருவத்தில் ஏற்படும் பாலியல் மீதான
நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம்
பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரகசியமாக செய்ய
முடிவது, வெளியில் சொல்லமுடியாத கற்பனைகளை நேரில் சொல்வதை விட சாட் ரூம் என்ற
பகுதியில் எதிர்பாலருடன் பகிர்ந்து கொள்வது எந்தவித பதற்றத்தையும் ஏற்படுத்தாது. எங்கும் எப்போது வேண்டுமானாலும் கிடைப்பது பொன்றவைகளே
வளர் இளம்பருவத்தினர் வலைதளங்களில் சைபர் செக்ஸில் ஈடுபட காரணங்கள் ஆகும்.
ஏனென்றால் வலைதள யுகத்திற்கு முன்பு ஓரமாக உள்ள பெட்டிக்கடைகளிலோ, ஆர்வக்கோளாறு
உள்ள அண்ணன்மார்களிடமோ மட்டுமே கிடைக்கக்கூடிய மஞ்சள் புத்தகங்கள் இப்போது வீட்டு
அறைக்குள்ளாகவே கிடைத்து விடுகிறது.
குறுந்தகவல்கள் மூலமாக பாலியல் விருப்பங்களை
பகிர்ந்து கொள்ளுதல், வெப் கேமராக்கள்
மூலமாக தொடர்பு கொள்ளுதல், ஆபாச காட்சிகள்
மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்தல் உட்பட பலவகைகளில் வலைதளம் வளர்
இளம்பருவத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் மற்ற வலைதள பயன்பாடுகளை
தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் இவர்கள், குறிப்பிட்ட சில செக்ஸ் சம்பந்தப்பட்ட
வலைதள பகுதிகளுக்கு அடிமையாகும் அளவுக்கு ஈடுபட வாய்ப்புண்டு. இதனால் வளர்
இளம்பருவத்தினரின் படிப்பு, தூக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள் பாதிப்பதோடு
மட்டுமல்லாமல் அதிக குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகி தற்கொலை வரை சென்றுவிடுகின்றனர்.
சில நேரங்களில் சமூகவிரோத செயல்பாடுகளுக்கும் பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக
அமைந்து விடக்கூடும்.
No comments:
Post a Comment