Tuesday, 19 July 2016

இணையதள அடிமைத்தனம்-வெளிவர வழி உண்டா?(Solutions for internet addiction)


இணையதளம், சமூக வலைதளம் ஆகியவற்றிற்கு அடிமையாகும் வளர் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒருவேளை அடிமையாகி விட்டால் என்ன செய்வது? இதனால் படிப்பு மற்றும் மனநிலை பாதித்துவிட்டதே? என்று பல பெற்றோர்கள் புலம்புவதை அடிக்கடி பார்த்துவருகின்றோம். இணையதள அடிமைத்தனத்திற்கென்றே மனநல சிகிச்சைகள், ஆலோசனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களை அதை மீண்டும் உபயோகிப்பதை தடுப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால்
இண்டர்நெட், வலைதளம், மொபைல்போன் உபயோகம் என்பதை முற்றிலும் தடை செய்யவே இயலாது. எனவே இவற்றை மிதமாகவும், கட்டுப்பாட்டுடனும் உபயோகிக்க வழிசெய்வதே சிறந்த வழியாகும்

இணையதள டைரி
இணையதள உபயோகத்திற்கு அடிமையானவர்கள் எந்த மாதிரி மனநிலையில் இருக்கும்போது வலைதளத்தை கட்டுக்கடங்காமல் உபயோகிக்கிறார்கள் என்பதை கண்காணிக்க இந்த டைரி முறை உபயோகமாக இருக்கும். இந்த டைரியில் ஒருவர் வலைதளத்தை ஒவ்வொருமுறை உபயோகிக்கும்போதும் எத்தனை மணிநேரம் உபயோகிக்கிறார் என்ற தகவலோடு, எத்தகைய வலைதளத்தை உபயோகிக்கிறார், அதை உபயோகிக்கும் முன்னும் பின்னும் உள்ள மனநிலை, ஒவ்வொரு முறை உபயோகிப்பதால் தடைபடும் அன்றாட மற்றும் முக்கிய வேலைகள், ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இதை தொடர்ந்து செய்துவந்தால் அவர் எவ்வளவு நேரம் விரயம் செய்கிறார், எந்த மனநிலைகள் அதிகம் உபயோகிக்க வழிவகுக்கின்றன, எத்தனை வேலைகளை பாதிக்கின்றது என்ற விழிப்புணர்வு கிடைக்கும்.

பயன்தரும் புதிய ஆரம்பம்
ஒருவேளை ஒரு குறிப்பிட்ட அப்ளிக்கேசன் அல்லது செயலி அதிக நேரத்தை விரயம் செய்தால் அதை ஸ்மார்ட் போனிலிருந்து நீக்கிவிடுவது நல்லது. மொபைல் போனில் அலர்ட் அல்லது செய்திகள் வந்துள்ளதை உணர்த்தும் சத்தத்தை நிறுத்தலாம். தேவையற்ற புக் மார்க் மற்றும் தேடுதல் வரலாற்றை (book marks and history) நீக்கிவிடலாம். மொத்ததில் கணிணியை ரீஸ்டார்ட் (restart) செய்வது போல சமூகவலைதளங்களை பார்க்கும் நேரத்தை தலைகீழாக மாற்றுவது பழக்கதோஷத்தில் நேரம் விரயமாவதை தடுக்கும். உதாரணமாக இரவில் நேரம்போவது தெரியாமல் உபயோகிப்பவர்கள் காலையில் சிறிது நேரத்தை அவசிய தேவைகளுக்கு உபயோகிக்கலாம்.

மருந்துகளும் தேவைப்படலாம்

தற்போது மனநோய்களின் வெளிப்பாடுகளும் கூட வலைதளத்தை அதிகமாக உபயோகிக்கும் வழியில் வெளிப்படுவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படும் நேரங்களில் வலைதள அடிமைத்தனத்திற்கு உட்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மன எழுச்சி நோயினால் ( Mania ) பாதிக்கப்படும் இளைஞர்கள் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவது, ஆபாச வலைதளங்களை அதிகம் பார்ப்பது, செல்போன் கொடுக்காவிட்டால் ஆக்ரோசமாக நடந்துகொள்வது போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகின்றனர். மேலும் மற்ற போதைப்பொருளகளுக்கு அடிமையானவர்கள் இணையதளத்திற்கும் அடிமையாக வாய்ப்புண்டு. இப்படி மன நோயின் பாதிப்புகளோடு இருக்கும் வளர் இளம் பருவத்தினருக்கு மனநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது மன நோயோடு, இணையதள அடிமைத்தனத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

No comments:

Post a Comment