Tuesday, 19 July 2016

புதைக்கப்படும் உணர்ச்சிகளும்,அறிவும் (Internet kills your emotions and knowledge)

புதைக்கப்படும் உணர்ச்சிகள்
சமீபத்தில் நடிகர் விஜய சேதுபதி “பேஸ்புக் என் உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வதுபோல உணர்ந்தேன், அதனால் என் கணக்கை டெலிட் செய்து அதிலிருந்து விலகிவிட்டேன்” என பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது தான் தற்போதைய ஆராய்ச்சிகளின் முடிவுகளும் கூட. ஒருவேளை நடிகர் விஜய சேதுபதி, சமூகவலைதளங்களின் பாதிப்புகளை குறித்து விளம்பர தூதுவராக நடிப்பது கூட ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஸ்மைலிகள் பயன்படுத்தும் பலரின் முகத்தில் உண்மையான புன்முறுவலைப் பார்ப்பதே அரிதாகிவருகிறாது. சமூகம் உருவாவதே தனிமனிதனிடம் இருந்து தான். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து
பேசிக்கொள்வது, முகபாவங்கள் மற்றும் உடல் பாவனைகள் மூலம் நாம் சொல்லவருவதை பிறருக்கு உணர்த்துவது மற்றும் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொளவதும் தான் சமூக பழக்கவழக்கத்தின் அடிப்படை. ஆனால் நமது சந்தோசங்கள், துக்கங்களின் வெளிப்பாட்டை OMG, LOL, RIP  என்று சுருக்கிவிட்ட இந்த குறுஞ்செய்தி உலகத்திற்கு சமூக வலைதளம் என்று யார்தான் பெயர் வைத்தார்களோ !. இதிலேயே பழகும் குழந்தைகளின் சமூக பழக்கவழக்கங்கள் மாறிவருவதாகவும், பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை மழுங்கி வருவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறன.

படிப்பில் ஏற்படும் பாதிப்புகள்
இணையதளத்தில் இருக்கும் நேரத்தை கட்டுப்பாடோடு வைக்க முடியாததால் தான் வளர் இளம்பருவத்தினரின் படிப்பு பாதிக்க ஆரம்பிக்கிறது. படிக்கவேண்டிய நேரங்களை வலைதளம் மற்றும் மொபைல்போன் தின்று விடுவதால் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவன் கூட தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். எப்போதும் கடந்தகால வாட்ஸ் அப், பேஸ்புக் பதிவுகளைக் குறித்த எண்ணங்கள் அடிக்கடி வந்து கவனச்சிதறலை ஏற்படுத்துவது படிப்பை மேலும் பாதிக்கும். தொடர்ந்து வலைதளத்தை பயன்படுத்தும் மாணவர்களின் ஞாபகதிறன் குறைய வாய்ப்புள்ளதாக (Digital Dementia) சமீபத்தைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment