ஓட்டம் பிடித்தல்
ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, சில வளர் இளம்பருவத்தினருக்கு
வீட்டை விட்டு ஓடிப்போவது வாடிக்கையான விஷயமாக மாறிவிடும். அப்பா அடித்தாலோ,
தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலோ சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது ஓடிப்போவது உண்டு.
இது ‘நாங்கள் குணரீதியாக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்’ என
பெற்றோருக்கு மறைமுகமாக சொல்லும் எச்சரிக்கையாகும். அதற்கு முன்னரே இவர்கள்
அடிக்கடி இரவில் வெளியில் தங்குவது, நண்பர்களுடன் குறிப்பாக வயதில் மூத்தவர்களுடன்
ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவது வழக்கமாக இருக்கும். பள்ளிக்கு
செல்லாமல் அடிக்கடி படத்துக்கு செல்வதும் ஒரு முக்கிய மாற்றம் தான்.
கும்பல் சேருதல்
உணவு இடைவேளையின் போது பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையிலோ, ஒதுக்குப்புறமான
இடங்களிலோ கூட்டம் கூடுவார்கள். இங்கு தான் இளம் சமூகரோதிகள் உருவாகும் இடம். பல
புதிய நட்புகளுடன் போதைப்பொருட்களின் அறிமுகமும் இங்குதான் கிடைக்கும். ஒன்றாக
சேர்ந்த்து புகைப்பது முதல் கஞ்சாவை உபயோகிப்பது வரை கற்றுக்கொள்வார்கள். இவர்களுக்குள்
தன்பாலின உறவும் ஏற்பட
வாய்ப்புண்டு. சில நேரங்களில் இளம்வயதிலேயே பாலியல்
வன்முறைகளில் ஈடுபடுவது, பிறரை காயப்படுத்திப் பார்ப்பதில் அலாதி இன்பம் போன்ற
ஆபத்தான நடவடிக்கைகளும் காணப்படும்
பொய் மூட்டை
அப்பாவின் சட்டைப்பையில் பத்து ரூபாய் திருடி ஆரம்பிக்கும் பழக்கம், பூட்டை
உடைத்து திருடும் வரை போகக்கூடும். ஆனால் இவர்கள் புத்தகங்களுக்குள் ரூபாய் நோட்டை
வைத்தால் பத்திரமாக இருக்கும் அளவுக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. பொய்
சொல்வதில் போட்டிவைத்தால் இவர்களுக்கு தான் முதலிடம் கிடைக்கும். அன்றாட
வாழ்க்கையின் சின்னச்சின்ன விஷயங்களில் ஆரம்பித்து தனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக
எத்தனை பெரிய பொய்யையும் சாதாரணமாக சொல்லி பழகிவிடுவார்கள். அதே நேரம் தங்கள்
காரியத்தை சாதிக்க எந்த நிலைக்கும் இறங்கிவருவார்கள்
குரூரத்தன்மை
மனசாட்சி மரத்துப்போவது சிலநேரங்களில் குரூர செயல்களாக வெளிப்படும்.
மற்றவர்களை உடல்ரீதியாக துன்புறுத்துவது இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு சாதாரண
விஷயம். அதற்காக அவர்கள் வருத்தப்படுவதும் இல்லை. விலங்குகள் விஷயத்தில் சிறுசிறு
சேட்டைகள் சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்களின் குரூரத்தன்மை, விலங்குகளை கொடூரமாக
சித்திரை செய்வதில் வெளிப்படும்.
காரணங்கள்
மரபணுமாற்றங்கள் தான் இதில் முக்கிய பங்குவகிக்கின்றன. ‘தாயைப்போல பிள்ளை,
நூலைப்போல சேலை’ என்ற சொல்லின்படி பெற்றோரின் நன்னடத்தைகளில் உள்ள வேறுபாடுகள்
பிள்ளைகளை பாதிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாக தெரிவிக்கின்றன. அதிலும்
போதைப்பழக்கம் உள்ள பெற்றோருக்கும் வளர் இளம்பருவத்தினரின் சமூகவிரோத
குணமாற்றங்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பதையும் உறுதி செய்துள்ளனர். சில
நேரங்களில் டிப்ரசன் அல்லது மனஅழுத்த நோயினால் பாதிக்கப்பட்டர்கள் இதுபோன்ற
சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அப்படிப்பட்டவர்களை மனநல சிகிச்சைக்கு
உட்படுத்தினால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். போதைப்பொருட்களை உபயோகிக்கும்போதும்,
அதனால் ஏற்படும் மனநோய்களும் கூட இதுபோன்ற அறிகுறிகளாக வெளிப்படும்
கார்ட்டூன்கள் மற்றும் வீடியோகேம்கள்
குழந்தைப்பருவத்தில் அதிக அளவில் கார்ட்டூன் படங்கள் மற்றும் வீடியோகேம்களில்
ஈடுபடுவது பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில்வரும் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள் அதிக
துறுதுறுப்பை ஏற்படுத்துவதுடன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறனையும்
பாதிக்கும். மனிதர்களை உயிராக பாவிக்காமல் பொருள்களாக பாவிக்கும் மனநிலை ஏற்படும்.
இதனால் பிறரின் உணர்வுகளை மதிக்கவும், புரிந்தது கொள்ளும் தன்மையும் பாதிக்கும்.
இது வளர் இளம்பருவத்தில் பல உறவுரீதியான சிக்கல்களையும் ஆக்ரோஷமான
நடவடிக்கைகளையும் ஏற்படுத்தும்.
முக்கியத்துவம்
மேற்கூறப்பட்டவை எல்லாம் இந்த குணநலன் மாற்றங்கள் உடையவர்களை கொடூரர்களாக
சித்தரிப்பதற்கு அல்ல. வளர் இளம்பருவத்தில் தான் இந்த மாற்றங்கள் தெரிய
ஆரம்பிக்கும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சாதகமற்ற குடும்ப சூழல்கள்,
சமுதாய சூழல்கள் மற்றும் அவர்களின் மனரீதியான பிரச்சினைகளை ஆரம்ப கட்டத்திலேயே
சரிசெய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment