Thursday, 26 May 2016

மன அழுத்தம் ஒரு நோயா? Depressive disorder


“உன்னால் முடியும் தம்பி, நாங்க எல்லாரும் இருக்கோம் உன்னை நம்பி” என்ற அறிவுரைகள் யாருக்கு கிடைக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினருக்கு இலவசமாகவே கிடைக்கும். “உன்னை பெத்ததுக்கு ஒரு  தென்னைமரத்த நட்டு வச்சிருந்தா இளநீராவது கிடைக்கும். இப்படி தண்டமா உட்கார்ந்திருக்கியே” என பல நேரங்களில் வளரிளம் பருவத்தினருக்கு அர்ச்சனைகள் கிடைக்கும். அவர்களின் நடவடிக்கைகளும் சில நேரங்களில் அப்படித்தான் அமைந்துவிடும். ஆனால் மன அழுத்த நோயிலும் இது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மன அழுத்தம் ஒரு நோயா?
நான் இன்னைக்கு டிப்ரஸ்டா இருக்கேன் என்று எல்லோரும் சாதாரணமாக கூறுவது வேறு, மன அழுத்தம் அல்லது டிப்ரசன் நோய் (Depressive disorder) என்பது வேறு. இது சுமார் 10-15% வரையிலான வளரிளம் பருவத்தினரை பாதிக்கும் அளவிற்கு பரவலான ஒன்று. இது ஏதாவது மோசமான வாழ்க்கை சூழலினாலும் ஏற்படலாம், எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் கூட தானாகவும் ஏற்படலாம். பெற்றோர்களிடமிருந்து கூட மன அழுத்த நோய் ஏற்படுத்தும் மரபணுக்கள்
பிள்ளைகளுக்கு கடத்தப்படும்போது வளர் இளம் பருவத்தில் மன அழுத்தம் ஏற்படலாம்.  படிப்பில் உள்ள பிரச்சனைகளினால் மன அழுத்தம் ஏற்படலாம். அதேநேரம் மன அழுத்த நோய் ஏற்படுவதால் படிப்பில் மந்தத்தன்மை ஏற்படலாம். காரணம் எதுவாக இருந்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது மூளை நரம்புகளில் காணப்படும் ‘செரடோனின்’ என்ற இரசாயனப் பொருள் தான். இது தான் ஒருவரின் மன உற்சாகதன்மையை தீர்மானிக்கும் வேதிப்பொருளாகும். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த மன அழுத்தம் யாரையும் பாதிக்க வாய்ப்புண்டு.
மருத்துவ காரணங்கள்

வாழ்க்கை சூழ்நிலைகள், மரபணுக்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் உடல் ரீதியான மருத்துவ நோய்கள் கூட மன அழுத்த நோயை உண்டுபண்ணும். உதாரணமாக தைராய்டு என்ற ஹார்மோன் குறைவாக சுரப்பதினால் கூட மூளைநரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால் 50% பேர்வரை மன அழுத்த அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் எல்லோரும் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்வதில்லை. குறிப்பாக வளர் இளம் பருவத்தினருக்கு நாள்பட்ட தலைவலி, திடீரென ஏற்படும் மயக்கம் அல்லது வலிப்பு போன்ற உடல்நோய் அறிகுறிகள் கூட மன அழுத்த நோயின் அறிகுறியாக இருக்கலாம். பள்ளி செல்வதை புறக்கணித்தல், பள்ளி செல்லும் நேரம் வந்ததும் ஏற்படும் வயிறுவலி, வாந்தி கூட இதன் அறிகுறியாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட நோய்க்கான எல்லா பரிசோதனைகளிலும் எந்த பிரச்சினையும் இல்லாவிட்டால் மனநல மருத்துவரின் ஆலோசனை அவசியம்.  

No comments:

Post a Comment