Wednesday, 29 April 2015

தூக்கத்தில் பேசுதல் & நடத்தல் ( Sleep walking & talking)


ஒரு மனிதனுக்கு சராசரியாக 6 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரம் அளவிற்கு தூக்கம் அவசியம். இது வயதைப்பொறுத்து மாறும். மனிதனின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான தூக்கம் சரியாக அமைவது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். பல உடல்நலக்குறைவுகள் மற்றும் மனரீதியான பிரச்சினைகள் தூக்கமின்மைக்கு முக்கிய காரணங்களாகும். மன அழுத்தம், பதட்டம் உட்பட பல காரணங்களை அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். தூக்க வியாதிகள் என்பது தூக்கத்தின் நேரம் குறைவது மட்டுமல்ல. போதுமான நேரம் தூங்கினாலும்
தூக்கத்தின் தரம் சரியில்லாத பட்சத்தில் பல தொந்தரவுகள் ஏற்படும். தூக்கம் என்பது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு அல்ல. தூக்கத்தின் போது REM sleep மற்றும் NREM sleep என இரண்டு பாகங்கள் குறிப்பிட்ட இடைவளியில் சுழற்சி முறையில் மாறிமாறி வரும். அதில்NREM என்ற பகுதியில் சில மாற்றங்கள் ஏற்பட்டால் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். அப்படி தூக்கத்தின் தரத்தை பாதிக்கும் சில முக்கிய பிரச்சினைகளை பார்ப்போம்.
தூக்கத்தில் பேசுதல் மற்றும் நடத்தல்
இது பெரும்பாலும் 5 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு காணப்படும். சில நேரங்களில் இது வயது கூடிய பின்னரும் தொடர்ந்து காணப்படும். தூக்கத்தில் நடப்பதால் காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அல்லது தூகத்தில் தானாகவே எழுந்து அறையின் ஏதாவது ஒரு மூலையிலோ, வெளியிலோ சென்று தூக்கத்தை தொடர்வார்கள். இரவில் தொடர்ந்து தூங்குவது போல காணப்பட்டாலும் இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு பகல் நேரத்தில் கவனக்குறைவு, மறதி, எரிச்சல் உணர்வு, அதிக சோர்வு மற்றும் தளர்ச்சி, பதட்ட உணர்வு, படிப்பில் அல்லது வேலையில் மந்தத்தன்மை போன்றவை ஏற்படும். இந்த பிரச்சினைகள் ஏற்பட்டால் மனநல மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
தூக்கத்தில் பதட்டம்

இதுவும் குழந்தை பருவத்தில் ஆரம்பித்து வயது கூடும் போதும் தொடர்ந்து காணப்பட வாய்ப்புள்ளது. தூக்கத்தில் திடீரென வீறிட்டு அலறிக்கொண்டே எழும்பி அதிக பதட்டத்துடன் காணப்படுவார்கள். சில நொடிகள் அல்லது நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் இந்த பதட்ட நிகழ்வை காலையில் அவர்களால் ஞாபகப்படுத்த இயலாது. இதுவும் மேற்கூறியது போல் பகல்நேரத்தில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சினை உள்ள பலருக்கு தூக்கத்தில் உதைத்தல், அதிகப்படியான அசைவுகள் சேர்ந்து காணப்படும். சில நேரங்களில் உதைத்தல் தனிப்பிரச்சினையாக மாத்திரைகள் தேவைப்படும் அளவிற்கு உருவெடுக்கலாம். இப்பிரச்சினைகளுக்கு சரியான மருந்துகளை உட்கொள்வது மூலம் குழந்தைகளின் தூக்கத்தின் தரத்தை மட்டுமல்ல, வாழ்க்கை தரத்தையும் உயர்த்தலாம்.

No comments:

Post a Comment