Monday, 27 April 2015

மனநோய்-நிஜமும் நிழலும் (Mental illness-Facts and Myths)


5 ல் ஒரு இந்தியர் தனது வாழ்வில் ஒரு முறையாவது மனநல மருத்துவம் செய்து கொள்ளும் அளவிற்கு லேசான அல்லது தீவிரமான மனநோயின் பாதிப்பிற்கு ஆளாகின்றார்.சராசரியாக 5-15% பேர் தீவிர மனஅழுத்த நோயினாலும்(depression), குறிப்பாக பெண்கள் சராசரிக்கு அதிக அளவிலும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.ஸ்கிஷோஃப்ரினியா(schizophrenia) என்று அழைக்கப்படும் மனச்சிதைவு நோய் ஆயிரத்தில் 3-4 பேரை பாதிக்கின்றது.90% வரையிலான ஆண்கள் வாழ்கையில் சில காலங்களாவது மது உட்பட போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர்.அதில் 50% க்கும் அதிகமானோர் போதைக்கு அடிமையாவதுடன் பலர் மனநோயினாலும் பாதிக்கபடுகின்றனர்.நாளொன்றிற்கு 350-400 இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.குறிப்பாக தமிழ்நாடு இதில் முதல் இடம் வகிக்கின்றது.இந்தியாவில் சராசரியாக 30-35 லட்சம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் டெமன்ஷியா(dementia) எனும் ஞாபகமறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மனிதனுக்கு உடல் நலம் எப்படி முக்கியமானதோ அந்தளவிற்கு மனநலமும் இன்றியமையாதது.உடல் உறுப்புகளை நோய்கள் தாக்குவது போல மனமும்
நோய்களால் பாதிக்கப்படலாம்.மனநோய்கள் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்களால் உருவாகின்றன. இம்மாற்றங்கள் தானாகவோ, வாழ்க்கை சூழ்நிலையினாலோ அல்லது பல்வேறு நரம்பு சம்பந்தபட்ட நோய்களினாலோ உண்டாகலாம்.உடல் நோய்களை போலவே மனநோயும் மருந்துகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்றாகும்.
மனநோயை பற்றியும் அதன் வைத்தியத்தை பற்றியும் குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட போதிலும் இன்னும் அனேக தவறான நம்பிக்கைகள் மக்களிடையே நிலவுகிறது.50% கும் அதிகமானோர் சிகிச்சை எடுக்காமலோ அல்லது மிகவும் காலம் தாழ்த்தி சிகிச்சைக்கு செல்லும் நிலை உள்ளது.மனநோயாளிகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக கருதுவதும்,பேய்கோளாறு என நினைப்பதும்,மனநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் மாத்திரைகளுக்கு அடிமையாகிவிடுவோம் என்ற தேவையற்ற பயமும் இதற்கு ஒரு காரணம்.இந்த காரணங்களினால் மனநல மருத்துவரை அனுகாமல் காலம் தாழ்த்துவது தான் நோயின் தீவிரத்தன்மையை அதிகப்படுத்துகிறது.
ஆரம்ப அறிகுறிகள் தென்படும்போதே சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் மனநோய்கள் குணப்படுத்தபடக்கூடியவை தான்.மனநோய் சிகிச்சையில் பல புதிய மருந்துகளின் வரவு நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் உள்ளது.உலகம் இயங்கும் வேகத்திற்கு ஏற்ப மக்களின் மனஅழுத்தமும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.எனவே மனநல பாதிப்பு என்பது சமுதாயத்தில் எந்த நிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும் இளைஞர்களிடையே அதிக அளவில் காணப்படும் போதை பழக்கவழக்கங்கள் அவர்களின் வாழ்க்கை பாதையை மாற்றுவது மட்டுமல்லாது எளிதிலே மனநோயின் தாக்கத்திற்கும் அவர்களை ஆளாக்குகிறது.

முதிர் வயதில் ஏற்படும் மனநல பாதிப்புகள் என்பது தான் இந்த வருடம் உலக மனநல நாளின் மையக்கருத்தாகும்.மனஅழுத்தம்,ஞாபக மறதி நோய் மற்றும் பல மனநல பிரச்சினைகள் வயதாகும் போது அதிக அளவில் காணப்படுகிறது.தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படுவது மட்டுமல்லாது வயதானவர்களை கவனிக்கும் குடும்ப நபர்களின் பாரமும் குறைகிறது. 

No comments:

Post a Comment