சற்றே பழைய காலத்து செய்தி என்றாலும் வரலாற்றில் மறக்க,
மறைக்க இயலாத ஒரு நிகழ்வு. ஒரு தவறான செய்தி எப்படி பரவுகிறது, அது எப்படி ஒரு
சாதாரண மனிதனையும் கலகக்காரனாக மாற்றுகிறது, அதன் விளைவுகள் என்ன என்பதற்கு இதைவிட
பெரிய உதாரணம் இருக்க முடியாது. அதுவும் தகவல் தொடர்பு என்பது கடித அளவில் மட்டுமே
இருந்த காலத்தில். ஆனால் அது கற்றுக்கொடுத்த பாடம் மிகப்பெரியது
சாலெம் சூனியக் கலகம்
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மசாசுசெட் ( தற்போதைய டேன்வர்
) என்ற பகுதியில் 1692 ஆம் ஆண்டு சில இளம் சிறுமிகளுக்கு திடீரென்று ஆக்ரோஷம்,
வலிப்பு, பேய் பிடித்தது போல பேசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது. அவர்களை
மருத்துவர் பரிசோதிக்கும்போது
அந்த சிறுமிகள், தாங்கள் பில்லிசூனியத்தால் தான்
அப்படி ஆனதாக கூறியது மட்டுமல்லாமல் அந்நகரத்திலுள்ள சில பெண்களைக் காட்டி அவர்கள்
தான் சிறுமிகளுக்கு சூனியம் வைத்ததாகவும் கூறிவிட்டனர். அதில் ஆரம்பித்தது தான்
வினை. ஏற்கனவே மனநோய்களுக்கு சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத காலமாக
இருந்ததாலும், மதரீதியாகவும் பில்லி சூனியம் போன்ற நம்பிக்கைகளில் மக்கள் ஊறியிருந்ததாலும்
இந்த செய்தி காட்டுத்தீ போல நகரம் மற்றும் சுற்றுப்புறத்திலும் பரவ ஆரம்பித்தது.
.இதைத்தொடர்ந்து சூனியம் வைத்ததாக சொல்லப்பட்ட சில
பெண்களும், ஏற்கனவே தனியாக ஆதரவின்றி வாழ்ந்து கொண்டிருந்த பல பெண்களும்
சூனியக்காரிகளாக கருதப்பட்டு மக்களால் சிறை பிடிக்கப்பட்டனர். தாங்களும் இதில்
பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று
சந்தேகத்திற்குட்பட்டவர்களை எல்லாம் சூனியக்காரர்கள் என தீர்மானித்து சுமார் 200
பேரை சிறைபிடித்தனர்.
சாலெம் சூனியத் தீர்ப்பு (salem witch
trial)
நிலைமை மோசமாவதை உணர்ந்த அப்பகுதி ஆளுனர் வில்லியம்
ஃபிலிப் ஒரு தனி நீதிமன்றத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். சுமார் ஒரு
வருடமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறைபிடிப்பு சம்பவங்களும், விசாரணையும் நடந்து
வந்தது. இதில் உச்சகட்ட கொடுமையாக இதை விசாரித்த நீதிபதிகளும் பில்லி
சூனியத்தினால் தான் அச்சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக முடிவு செய்து,
பில்லிசூனியத்தில் ஈடுபட்டவர்கள் என நிருபிக்கப்பட்ட சுமார் 20 பேரை தூக்கிலிடவும்
உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கலகக்கூட்டம் அவர்களை பொது இடத்தில் தூக்கிலிட்டதோடு
முரண்டுபிடித்த ஒருவரை கல்லால் அடித்தும் கொன்று தன் வெறியைத் தீர்த்துக்கொண்டது.
மாப் (Mob) அல்லது கலக்கூட்டம்
மேற்கூறிய வரலாற்று சம்பவம், சாதாரண மக்கள் கூட்டம்
எப்படி இத்தனைக் கொடூர கலக்கும்பலாக மாற வாய்ப்புள்ளது என்பதற்கு சிறந்த உதாரணம்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உருவாகும் இந்த கலவரக்கூட்ட்த்திற்கு மாப் (mob) என்ற
பெயர் உண்டு. அதில் ஈடுபடுபவர்களின் மன நிலையில் அந்நேரத்தில் ஏற்படும்
மாற்றங்களைக் குறித்து சிக்மண்ட் ஃப்ராய்ட், லெபான்
உட்பட பலர் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
யார் இவர்கள்
திடீரென்று உருவாகும் கலகக்கூட்டத்திற்கு தலைவர் யார்
என்பது அதில் பங்கேற்பவர்களுக்கே தெரியாது. இவர்கள் ஒரு குறிப்பிட்ட தலைமையின்
கீழோ அல்லது குறிக்கோளோடோ இயங்குவதை விட வதந்திகளின் அடிப்படையிலும்,
உணர்ச்சிப்பெருக்கின் உந்துதலினாலுமே இயங்குகின்றனர். இக்கூட்டத்தில் உள்ள
ஒவ்வொருவரும் மற்றவரை முன்பே அறிந்திருக்க வாய்ப்பில்லை, மேலும் ஒவ்வொருவரும்
தங்கள் தனித்தன்மையை இழப்பதினால் சாதாரணமாக சாதுவான குணம் உடையவர்கள் கூட இக்கலகக்கும்பலில்
சேரும்போது மூர்க்கமாக மாறிவிடுகின்றனர். நோய்க்கிருமிகள் பரவுவது போல ஒருவருடைய
கோபமோ, வெறியோ மற்றவரைப் பற்றிக்கொள்கிறது. இவர்கள் படிப்புரீதியாகவோ, பொருளாதார
ரீதியாகவோ, அறிவுத்திறன் ரீதியாகவோ வேறுபட்டிருந்தாலும் எண்ணம், செயல்பாடுகளில்
ஒருமித்து கட்டுக்கடங்காமல் செயல்படுவது ஆச்சரியத்தின் உச்சகட்டம்.
உளவியல் காரணங்கள்
ஏதேனும் ஒரு தகவலை கேட்டு அதை உறுதிப்படுத்துவதை விட
உணர்ச்சிப்பெருக்கத்தின் உந்துதலுக்கு அதிக இடம் கொடுப்பது, அந்த விஷயத்தை
பகுத்தாராயும் தர்க்க அறிவுக்கு இடம் கொடாமல் இருப்பது, ஆகிய இரண்டு மனநிலைகளின்
விளைவே கட்டுக்கடங்கா கலகக்கூட்டம் ஏற்பட முக்கிய காரணம். மேலும் இக்கலகக்கும்பலில்
உள்ள ஒவ்வொரு தனிநபருக்கு உருவாகும் “எல்லோரும் ஈடுபடும் விஷயத்தில் தானே நாமும்
ஈடுபடுகிறோம்” என்ற பொறுப்பற்ற தன்மையும், “இத்தனை பெரிய கூட்டத்தில் நாம்
செயல்படுவதை யார் கண்காணிக்க முடியும்” என்ற அநாமதேயமான எண்ணமும், கூட்டம்
கொடுக்கும் உற்சாகம் மற்றும் வலிமையும் மேலோங்கும்போது சாதுவான ஒருவர் கூட பிறரை
சாகடிக்கும் மனநிலைக்கு மாறிவிடுகிறார். இந்த மனநிலையில் இருப்பதனால் தான்
இதுபோன்ற கலகக்கும்பலுக்கு சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் அளவிற்கு
துணிச்சலும், எதிர்ப்புகளை சமாளிக்கும் உத்வேகமும் ஏற்படுகின்றது.
சமீபத்தைய உதாரணங்கள்
சமீபத்தில் நாகலாந்தின் திமாப்பூரில் பாலியல் வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதியை ஆயிரக்கணக்கானோர் அடங்கிய
கும்பல் சிறைக்குள் புகுந்து வெளிக்கொண்டுவந்தது மட்டுமல்லாமல், பல கிலோமீட்டர்
தூரம் அடித்து துவைத்து கொன்ற சம்பவம் மேற்கூறிய கலக மனநிலைக்கு மற்றுமொரு சிறந்த
உதாரணம். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆப்கானில் குரானை சேதப்படுத்தியதாக குற்றம்
சாட்டப்பட்டு ஒரு பெண் இதுபோன்ற கும்பலால் தான் கொன்று எரிக்கப்பட்டார். ஆச்சரியம்
என்னவென்றால் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பலருக்கு தங்களுக்கு கிடைத்த
தகவல்களின் நம்பகத்தன்மையோ அல்லது தங்களது செயல்பாட்டின் முடிவு எப்படி இருக்கும்
என்பது கூட தெரியாமல் இருப்பது தான். உலகின் ஏதோவொரு மூலையில் நடப்பது மட்டுமல்ல.
கல்லூரி மாணவர்கள் திடீரென நிர்வாகத்துக்கு எதிராக போராடுவது, மடிக்கணிணி
கிடைக்கவில்லை என பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிடுவது, ஆசிரியர்
பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்துவிட்டார் என பெற்றோர் மற்றும் கட்சியினர்
பள்ளியை முற்றுகையிடுவது, மர்ம கொலைகாரன் எனக் கருதி தெருவில் திரியும்
மன்நோயாளிகள் தாக்கப்படுவது, என நாள்தோறும் நமக்கு அருகிலேயே பல மாப் நடவடிக்கைகள்
நடந்தேறி வருவது ஆரோக்கியமான விழிப்புணர்வா அல்லது ஆரோக்கியமற்ற கலாச்சாரமா என்பது
பட்டிமன்றம் போட்டு விவாதிக்க வேண்டிய விஷயம் தான். அதுவும் சமூகவலைதளங்கள்
மற்றும் குறுஞ்செய்திகளின் அடிப்படையில் ஏற்படும் தகவல் பரிமாற்றங்கள் உபயோகமாக
இருந்ததாலும், சில வேளைகளில் மேற்கூறிய ஆபத்தையும் உண்டுபண்ண வாய்ப்புள்ளது
என்பதையும் மறுக்க முடியாது
தடுக்க முடியமா?
பொதுவாக ஒரு கலவரக்கும்பல் என்பது ஒன்றுக்குள் ஒன்றாக
அமைந்த மூன்று வட்டம் போன்றது. உள்வட்டத்தில் தீவிரமான, ஆக்ரோஷமான நபர்களும்,
அதற்கு வெளிவட்டத்தில் சற்று தீவிரம் குறைந்த, அவ்வப்போது எழுச்சியடையும்
கூட்டமும், மூன்றாம் வட்டம் அதாவது வெளிப்பகுதியில் வேடிக்கை பார்க்கும் அல்லது
நிகழ்வுகளை ரசிக்க விரும்பும் ஆனால் ஈடுபட விரும்பாத கூட்டமும் இருக்கும். எந்த
கலவரகும்பலும் இதற்கு விதிவிலக்கல்ல. இது போன்ற கும்பலான நடவடிக்கைகள் உருவாகும்
முன் தடுப்பது தான் சிறந்த, எளிய வழி. ஆனால் உருவாகி விட்டால் கட்டுக்குள்
கொண்டுவருவது எளிதல்ல. அது போன்ற நேரங்களில் இந்த மூன்றடுக்கு முறையை முழுமையாக
புரிந்து கொண்ட பாதுகாப்பு அணியினால் மட்டுமே குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளாவது
மேற்கொள்ள முடியும்.
நிரந்தர வலியாகும் உண்மைகள்
எல்லா ஆக்ரோஷமான கூட்டத்தினரின் அணுகுமுறையும் நியாமானது
என்று சொல்ல முடியாது. சாலெம் சூனியக்கலவர தீர்ப்பை ஆராய்ந்த ஒரு அறிவியல் நாளிதழ்
1976 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு கட்டுரையில் சாலெம் நகரின் சிறுமிகள் மனநிலை
பாதிக்கப்பட்டதற்கு அவர்கள் உண்ட தானியத்தில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒருவித
பூஞ்சைக்காளான் தாக்கம் இருந்ததே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்ணால்
காண்பது, காதால் கேட்பதை விட தீர விசாரித்தலே தகும் என முன்னோர்கள் சும்மாவா
சொல்லி வைத்தார்கள்.
No comments:
Post a Comment