Friday, 17 April 2015

வாட்ஸ்அப்-காத்திருக்கும் ஆபத்து ( Dangers of Whatsapp)

சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை உபயோகிப்பது தற்போது மாணவர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவருகிறது. ஒரு பழக்கமாகவோ, பொழுதுபோக்கு அம்சமாகவோ ஆரம்பிக்கும் இது பலருக்கு ஒரு போதைப்பொருளாகவே மாறிவிடுவது தான் அபாயமான ஒன்று.
அடிமையாதலின் அறிகுறிகள்
நாளுக்கு நாள் சமூக வலைதளங்கள் மற்றும் மொபைல் போனில் செலவிடும் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்லுதல், மற்ற முக்கிய வேலைகளை ஒதுக்கிவிட்டு இதற்கு மிக முக்கியம் கொடுப்பது, ஒரு நாள் கூட மொபைல்போனோ அல்லது இன்டர்நெட் தொடர்போ இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை
, உபயோகிக்க இயலாத நேரங்களில் எதையோ இழந்த உணர்வு, எரிச்சல், பதட்ட உணர்வு ஏற்படுதல், படிப்பு, வேலை அல்லது உறவுகளில் பாதிப்பு ஏற்பட்ட பின்பும் அதை தொடர்ந்து உபயோகிக்கும் உந்துதல் ஏற்படும் நிலை, மற்றும் முக்கியமாக காலையில் விழித்த உடன் அதை உபயோகித்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் உருவாவது போன்றவைகளில் ஏதேனும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால் அந்த நபர் சமூக வலைதள உபயோகத்திற்கு அடிமையாகி விட்டார் என்றே அர்த்தம்.
பின்விளைவுகள்
மாணவர்கள் குறுஞ்செய்திகளைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதால் படிப்பில் கவனமின்மை, நாட்டமின்மை, ஞாபகமறதி போன்ற பிரச்சனைகளில் ஆரம்பித்து பள்ளிப்படிப்பை நிறுத்துதல், பெற்றோர்கள் கண்டிக்கும்போது வாக்குவாதம் செய்வது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுதல், ஆக்ரோஷமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற மனநல பாதிப்புகளும் ஏற்படும். நண்பர்களின் பாராட்டைப் பெறவேண்டும் என்ற உந்துதலினால் மாறுபட்ட அல்லது தணிக்கைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது, பிறரை கேலிசெய்ய, பழிவாங்க, ஆபாசக்காட்சிகளை வெளியிட சமூக வலைதளங்களை பயன்படுத்துவதினால் சட்டரீதியான சிக்கல்களுக்கும் ஆளாகின்றனர். பெரியவர்கள் இதற்கு அடிமையாவதால் வேலைகளில் மற்றும் தனிநபர்களிடையேயான தொடர்புகளில் பாதிப்பு, குடும்ப உறவில் சிக்கல்கள், திருமண உறவுக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது
சமூகத்தின் பார்வை
முன்பெல்லாம் ஒரு நபரைப் பற்றி பேசும்போது “ அவர் காபி, டீ கூட வெளியில் குடிக்கமாட்டார்” எனக் குறிப்பிடுவார்கள். ஆனால் இன்று ஒரு சமூகக் கூடுகைகளில் ஒருவர் மதுஅருந்தாமல் இருப்பது ஒரு அவமானமான செயலாக கருதப்படுவதுடன் அந்நபர் தனிமைப்படுத்தப்படும் உணர்வையும் பெறுகிறார். இதைப்போல தான் சமூகவலைதளங்களில் ஈடுபடாமல் இருப்பது ஒரு குற்றச்செயலாகவே கருதப்படும் நிலை உள்ளது. மேலும் இதில் பல நல்ல விஷயங்கள் இருப்பதாலும், அனைவராலும் பயன்படுத்தப்படுதல், எளிதில் கிடைத்தல் போன்ற காரணங்களினாலும் பெற்றோரின் முழுமையான கண்காணிப்புக்கு உட்படுவதில்லை.
தீர்வு என்ன

ஆரம்ப நிலையிலேயே தடுத்தல் அல்லது வரைமுறைப் படுத்துதல் தான் இதற்கு சிறந்த வழி. இதில் பெற்றோர்களே முக்கிய பங்குவகிக்க வேண்டும். முடிந்தவரை சமூகவலைதளங்களை உபயோகிக்கும் வயதை காலம் தாழ்த்துதல் நல்லது. பிள்ளைகளின் வலைதள மற்றும் குறுஞ்செய்திகளை கண்காணிக்க சிறந்த வழி பெற்றோர்களும் அவர்களின் நண்பர்களின் பட்டியலில் இருப்பது தான். ஆரம்பத்திலேயே உபயோகம் குறித்த கட்டுப்பாடுகளை விதிப்பது, எல்லை மீறும்போது முழுவதுமாக தடைசெய்வது போன்றவை அடிமைத்தனத்தை தவிர்க்கும். பிள்ளைகளுக்கு தேவையில்லை என்ற விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுப்பது நல்லது. பிள்ளைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமே தவிர பெற்றோர் பிள்ளைகளின் மிரட்டலுக்கு அடிபணியக்கூடாது. வீட்டில் உள்ளவர்களோடு செலவிடும் நேரத்தை அதிகரித்தல், குடும்ப நபர்களிடம் நேரம் செலவிடும்போது மொபைல் போன் உபயோகத்தை தடை செய்வது பலன் தரும். தீவிர சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு இது பலருக்கு மனநல பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக கையாளுவதுடன் தங்களையும் பாதுகாத்துக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment