மனிதனின் மனம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்
கொண்டிருக்கும் ஒரு தொழிற்சாலை போலத்தான். பல விஷயங்களை உள்வாங்கி, உருவாக்கி,
வெளிக்கொண்டு தன் பணியை தொடர்ந்து செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஏன்,
தூக்கத்தில் கூட கனவுத் தொழிற்சாலை இயங்குவதால் மனதிற்கு ஓய்வு என்பதே கிடையாது.
மனச்சிதைவு என்றால் என்ன?
மனம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு பலர் திணறுவது
உண்டு. நம் எண்ணங்களில் நிகழும் செயல்பாடுகள், ஜம்புலங்களின் உணர்ச்சிகள், பேசுவது
மற்றும் பிறர் பேசுவதை புரிந்துகொள்ளுதல், விஷயங்களை பகுத்தாய்தல், கவனம் மற்றும்
ஈடுபாடு, சமுதாயம் சார்ந்த பழக்கவழக்கங்கள் போன்ற பல விஷயங்கள் அன்றாட வாழ்விற்கு
மிக முக்கியமானவை. இவை
எல்லாவற்றையும் இயக்குவது, கண்காணிப்பது மூளை தான்.
மேற்கூறிய எல்லாம் மனதின் செயல்பாடுகள் என நீங்கள் ஒத்துக்கொண்டால் நிச்சயமாக மனம்
இருக்கும் இடமும் மூளை தான். மூளையின் இந்த செயல்பாடுகளில் சிதைவு ஏற்படும்போது
நிச்சயமாக ஒரு மனிதனின் மனநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அப்படி உருவாகும்
ஒருவகை மனநோய்தான் ஸ்கிசோபிரினியா (Schizophrenia) என்றழைக்கப்படும்
மனச்சிதைவு நோய்.
பாதிப்பின் தீவிரம்
உலக அளவில் சுமார் 50 மில்லியன் மக்கள் மனச்சிதைவு
நோயின் பாதிப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் சுமார்
7 மில்லியன் அடங்கும். இதில் 10% பேர் தற்கொலை செய்து இறக்கின்றனர். நோயினால்
பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் குறைவானோர் தான் மருத்துவ உதவியை நாடுகின்றனர்.
ஆதரவின்றி தெருக்களில் திரியும் பெரும்பாலான மனநோயாளிகள் மனச்சிதைவு நோயால்
பாதிக்கப்பட்டவர்கள் தான்.
காரணம் என்ன?
சிலநேரங்களில் நோயாளியின் உறவினர்களிடம் ‘இது போன்ற மனநலபாதிப்பு குடும்பத்தில் வேறு யாருக்காவது முன்பு
இருந்திருக்கிறதா’ என்று கேட்டால்,”ஊருல
இவங்க குடும்பத்தையே கோட்டிக்கார குடும்பம்னு பொதுவா சொல்வாங்க டாக்டர்” என்று பல
தலைமுறைகளில் இந்நோய் இருந்ததை நாசூக்காக சொல்வார்கள். மனச்சிதைவு நோய்க்கு பல
காலகட்டங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நவீனகால அறிவியல் முன்னேற்றங்கள் மரபணுக்களில்
எற்படும் மாற்றங்களே இதில் முக்கிய பங்குவகிக்கிறது என்பதை நிருபித்திருக்கின்றன.
மேலும் சாதகமற்ற வாழ்க்கை சூழல், மனஅழுத்தம், குழந்தை பருவத்தில் மன மற்றும் உடல்
ரீதியான பாதிப்புகள், போதை பழக்கங்கள், கலாச்சார மாற்றங்கள் போன்றவை இந்த மரபணு
மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. கடைசியாக இவை மூளையின்
செயல்பாட்டிற்கு முக்கியமான இரசாயன பொருட்களான டோபமைன் மற்றும் குளுடமேட்
போன்றவைகளில் மாற்றத்தை உருவாக்கி நோய்தன்மையை ஏற்படுத்துகிறது.
குணப்படுத்தக்கூடியதே
மனச்சிதைவு நோய் மருந்துகளால் குணப்படுத்தக்கூடியதே.
ஆரம்ப கட்டத்திலேயே நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டால் எளிதில்
கட்டுப்படுத்தலாம். பல புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு நோயை குணமாக்கும்
சதவீதத்தை அதிகரித்துள்ளதுடன் பக்கவிளைவுகள் குறைந்து காணப்படுவதால் நோயாளிகள்
பயமின்றி உட்கொள்ளவும் உதவியாக உள்ளது. சரியான முறையில் மருந்துகளை சாப்பிடுவோர்
சுமார் எழுபது சதவீதத்திற்கும் அதிகமானோர் நல்ல முன்னேற்றம் பெற்று சராசரி
வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மீதமுள்ளோர் தீவிர வகை நோயால் தாக்கப்பட்டோ
அல்லது தவறான உபதேசங்களினால் மருந்துகளை நிறுத்துவதனாலோ நெடுநாள்
பாதிப்புக்குள்ளாகி வாழ்ந்து வருகின்றனர். இதுதவிர சிலருக்கு மின் அதிர்வு
சிகிச்சை (Electroconvulsive therapy) முறையில் நல்ல
முன்னேற்றம் கிடைக்கும். மின் அதிர்வு சிகிச்சையானது சினிமாக்களில்
காண்பிக்கப்படுவது போல் ஒரு கொடூரமான சிகிச்சை அல்ல. தற்போது மயக்கவியல்
மருத்துவர்களின் உதவியுடன் 5 நிமிடம் மயக்கமருந்து கொடுத்தே இச்சிகிச்சை
செய்யப்படுவதால் நோயாளிக்கு எந்த சிரமமும் ஏற்படுவதில்லை.
சவால்களை எதிர்கொள்வோம்
மனச்சிதைவு நோயின் பாதிப்பிலிருந்து மீண்டு
சரித்திரத்தில் இடம்பெற்றவர்கள் பலர் உண்டு. அதில் ஒருவர் தான் ஜான் நாஷ் என்ற
கணிதவியல் மேதை. மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டு
வந்தாலும் காதில் மாயக்குரல் கேட்பது மட்டும் குறையவில்லை. ஆனாலும் அவர் அதை
மேற்கொண்டு தனது ஆராய்ச்சிகளை தொடர்ந்து 1994 ல் கணிதம் மற்றும் பொருளாதாரத்திற்கான
நோபல்பரிசு பெற்று சாதித்துகாட்டினார். இவரது வாழ்க்கையையும், மனச்சிதைவு நோயையும்
தத்ரூபமாய் பிரதிபலித்த ஹாலிவுட் படம் தான் “த பியூட்டிபுல் மைன்ட்” (The beautiful mind) என்ற பெயரில் வெளிவந்தது. இந்த வருடம் உலக
மனநலநாளின் மையக்கருத்தும் மனச்சிதைவு நோயாளிகளின் வாழ்வியலைப் பற்றிதான். எனவே
ஆரம்பகட்ட சிகிச்சையும், கனிவான கவனிப்பும் இருந்தால் சாதிப்பதற்கு எந்த தடையும்
இல்லை.
No comments:
Post a Comment