Monday, 27 April 2015

ஆவிவடிவில் ஒரு ஆபத்து (Inhalant substance abuse)


பொதுவாக போதை பொருட்களை உபயோகிப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வது எளிது. ஆனால் தற்போது பிரபலமாகி வரும் சில போதை பொருட்கள் நிழல் உலக தாதாக்கள் போல. இவை வெளியில் தெரிவதில்லை, கண்டுபிடிப்பது கடினம். ஆனால் இவை இன்றைய சமுதாயத்தில் இளைஞர்களையும் சிறுவர்களையும் கிருமி போல் ஊடுறுவிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும்.
ஆவிவடிவில் ஒரு ஆபத்து
ஒருமுறை பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனின் நடவடிக்கைகளில் பல நாட்களாக மாற்றம் தெரிவதாகவும், அவன் அடிக்கடி தனது கர்சீப்பில் ஏதோ ஒன்றை வைத்து உறிஞ்சிக்கொண்டிருப்பதை பார்த்ததாகவும்  கூறினார். அதை வாங்கி பார்த்தால் பேனா எழுத்துக்களை மறைக்க பயன்படுத்தும் ஒயிட்னர்
என்ற வெள்ளைநிற திரவம் தான். அதனால் தான் அவனை விட்டு விட்டேன் என்றார். நான் சொன்னபிறகு தான் அவருக்கு புரிந்தது அந்த மாணவன் அதைத்தான் போதைபொருளாக உபயோகித்துக்கொண்டிருக்கிறான் என்று.
மூச்சுக்குள் இழுக்கப்படும் போதைபொருட்கள்
சில வருடங்களாக பள்ளி மாணவர்களிடையே பிரபலமாகிவரும் ஒரு போதை பழக்கம் டொலுயீன் மற்றும் பெட்ரோலிய கழிவுகளிலிருந்து பெறப்படும் வேதியியல் பொருட்கள் தான். உதாரணமாக ஒயிட்னர், சைக்கிள் டியூப்களுக்கு பஞ்சர் ஒட்ட பயன்படுத்தும் பசை, நெயில் பாலிஷ் நீக்க பயன்படுத்தப்படும் திரவம், மைக்கா மற்றும் மரத்துண்டுகளை ஒட்ட பயன்படுத்தப்படும் பசைகள், பெயிண்ட்களோடு கலக்கப்படும் தின்னர் என்ற திரவம் போன்றவைகளாகும். இந்த திரவங்களை துணிகள், பாலிதின் கவர்களில் வைத்து சுவாசத்தில் உறிஞ்சும்போது ஒருவித போதைமயக்கம் ஏற்படும். மேலும் இந்த வகை பொருட்கள் எளிதில் கிடைப்பதாலும், அன்றாட வாழ்வில் உபயோகிக்கப்படுவதாலும் இதை வைத்திருக்கும் மாணவர்களை யாரும் எளிதில் சந்தேகப்படுவதில்லை. இதனால் அவர்கள் இந்த பழக்கத்திற்கு நெடுநாட்களாய் அடிமையாகும் வாய்ப்பும் அதிகம்.
பாதிப்புகள்
இந்த திரவங்களை சுவாசத்தில் இழுக்கும்போது சாதாரண எரிச்சல் முதல் மூச்சடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் வரை நிகழலாம். தொடர்ந்து உபயோகிப்பதனால் வலிப்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இருதயம் செயலிழந்து போதல் போன்ற பிரச்சினைகளும், ஞாபகமறதி, யாரோ பேசுவது போன்ற மாயகுரல் கேட்பது, மனக்குழப்பம், திடீர் ஆக்ரோஷம், பிறரை காரணமில்லாமல் தாக்குவது போன்ற மனநல பாதிப்புகளும் ஏற்படும். மொத்தத்தில் மாணவனின் பள்ளி செயல்திறன் குறைபாடுகள் ஏற்பட்டு படிப்பில் பின்தங்கும் நிலை ஏற்படும்.
வருமுன் காப்போம்

மேற்கூறிய போதைப்பழக்கங்கள் அதிக அளவில் வெளியில் தெரிவதில்லை என்பதால் இதை உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிலநாட்களுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்த ஒரு மாணவனிடம் விசாரித்ததில் அவனுக்கு தெரிந்து அவனது பள்ளியில் சுமார் 50 மாணவர்கள் உபயோகிப்பதாக கூறினான். எனவே இப்படியும் சில பொருட்கள் தவறான முறையில் உபயோகிக்கப்படலாம் என்பதை அறிந்தால் தான் ஆரம்பகட்டத்திலேயே இதை கண்டறிய முடியும். ஏற்கனவே இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இதன் பின்விளைவுகளை விளக்கி மனநல ஆலோசனை கொடுப்பதன் மூலமாகவும், ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தகுந்த மருந்துகளை உட்கொள்ளுவதன் மூலமாகவும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். பள்ளிகளில் இது பிரபலமாகி வருவதால் ஆசிரியர்கள் இதைக்குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

No comments:

Post a Comment