நோயாளியின் பார்வையில்
மனச்சிதைவு நோயாளியின் அறிகுறிகளெல்லாம் நமக்கு
வித்தியாசமாக தெரிந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை எல்லாம் உண்மையில் நடப்பது போல்
தான் இருக்கும். அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. அவர்களால் குடும்ப நபர்கள் பல
இன்னலுக்கு உட்பட்டாலும், நோயால் பாதிக்கப்பட்டவரின் மனநிலை எவ்வாறு இருக்கும்
என்பதையும் புரிந்து கொள்வது மிக அவசியம். தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்
தான் அதன் கஷ்டம் தெரியும் என்று சொல்லப்படுவது உண்டு. அது போலத்தான் மனச்சிதைவு
நோயினால் பாதிக்கப்படும் நபர்களுக்குத் தான் அதன் வேதனை தெரியும். உதாரணமாக நாம்
தனியாக இருக்கும்போது சில குரல்கள் மட்டும் நம்மை மிரட்டுவது போலவோ,
மாடியிலிருந்து குதித்துவிடு என்று சொல்வது போலவோ கேட்டுக்கொண்டே இருந்தால் நமக்கு
எவ்வளவு பயம் வரும். உண்மையில் வீட்டின் வெளியே
நம்மைத் தாக்குவதற்கு ஒரு கும்பல்
காத்திருந்தால் நாம் எப்படி பயந்து நடுங்குவோம். இது போலத்தான் அவர்களுக்கு குரல்
கேட்கும், மனதின் அனுபவமும் இருக்கும். எதற்கு இத்தனை விளக்கம் என்றால்
மனநோயாளியின் நிலை நமக்கு புரிந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு தகுந்த சிகிச்சைக்கு
நாம் முயற்சிப்பது மட்டுமல்லாது சமுதாயத்தால் அவர்கள் புறக்கணிக்கப்படுவதும்
குறையும்.குடும்பம் மற்றும் சமுதாயத்தின் பங்கு
மனச்சிதைவு நோயிலிருந்து ஒருவர் குணமடைவதிலும், குணமடையாதிருப்பதிலும் குடும்பத்தினரின் பங்கு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. தனக்கு மனநோய் இருக்கிறது என்பதையே நோயாளிகள் ஏற்கமறுப்பது மனச்சிதைவு நோயின் முக்கியமான ஒரு பிரச்சினை. அதனால் அவர்கள் மருந்தை உட்கொள்ள மறுப்பதோ அல்லது உறவினருக்கு தெரியாமல் மாத்திரைகளை வெளியில் எறிந்து விடுவதோ நிகழலாம். எனவே இதைக் கண்காணிப்பது மிக அவசியம். முடிந்த அளவிற்கு நோயாளியை வீட்டில் வைத்து பராமரிப்பதே நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என்ற ஆராய்ச்சியின் முடிவாகத்தான் உலக அளவில் பெரும்பாலான மனநலகாப்பகங்கள் மூடப்பட்டு விட்டன.
வேண்டாம் தவறான நம்பிக்கைகள்
ஒருவருக்கு மாரடைப்பு என்றால் மருத்துவம் செய்யத்தான் விரைவார்களே தவிர பேய்க்கோளாறு என்று சொல்வதில்லை. ஆனால் மனச்சிதைவு உட்பட சில நோய்களுக்கு ‘ஒரு வருடமாக பேய்க்கோளாறுக்கு வைத்தியம் செய்துவிட்டு வந்தோம்’ என பொன்னான காலத்தை வீணாக்கும் பழக்கம் இன்னும் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. இந்த விஷயத்தில் நோய்க்கும் பாரு, பேய்க்கும் பாரு என்ற பழமொழி கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது. அடிப்பதாலோ, கட்டிவைப்பதாலோ பாதிப்பு அதிகமே தவிர, குணமடைவதில்லை. சில மருந்துகளுக்கு தூக்கம் அதிகமாக வருவது ஒரு பக்கவிளைவே தவிர எல்லாருக்கும் தூக்கமருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது என்பது தவறான நம்பிக்கையாகும். உலகில் அன்றாடம் நடக்கும் அச்சுறுத்தும் சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நிச்சயமாக மனநோயாளிகள் ஆபத்தானவர்கள் அல்ல. அவர்கள் எதிர்பார்ப்பது புரிந்துகொள்ளப்படுதலும் அரவணைப்பும் மட்டும் தான்.
No comments:
Post a Comment