Monday, 27 April 2015

அனபாலிக் ஸ்டீராய்டு மனநல பாதிப்புகள் (Anabolic steroids)


அனபாலிக் ஸ்டீராய்டு இந்த வகை மருந்துகள் கேன்சர், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க மருத்துவதுறையில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இது மனித உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரான் (testosterone) என்ற ஹார்மோனை ஒத்த ஒரு மருந்தாகும். இது உடலின் தசைநார்களை பெருக்கமடையச் செய்து நல்ல புஷ்டியான தோற்றத்தை தரும் தன்மையுடையது.
தவறான உபயோகம்
இன்றைக்கு இளம் பெண்கள் பிரபல நடிகைகளைப் போல மெலிவான உடலமைப்பை பெற எவ்வாறு ஆசைப்படுகிறார்களோ, அதுபோல இளைஞர்கள் அர்னால்டு போல உடம்பில் பல படிக்கட்டுகளை வளர்க்க விரும்புகிறார்கள். எனவே உடற்பயிற்சிக் கூடங்களை நாடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் சீக்கிரம் உடல் தசைபருமனை பெருக்க இந்த அனபாலிக் ஸ்டீராய்ட் மருந்துகளை ஊசிகளாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ உட்கொள்கின்றனர். மேலும் இந்த மருந்துகள் அதிக உத்வேகத்தையும் ஆக்ரோஷத்தையும் தருவதால் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் இளைஞர்களால்
ஊக்கமருந்தாகவும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் கட்டுமஸ்தான உடலமைப்பு மற்றும் விளையாட்டுகளில் வெற்றி போன்ற காரணங்களால் கவரப்படும் இளைஞர்கள் இதைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பித்து இம்மருந்துகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.
பாதிப்புகள் என்ன

அனபாலிக் ஸ்டீராய்ட் மருந்துகள் தவறாக உபயோகிக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது இரத்தத்தில் தீமை தரும் கொழுப்புச் சத்துகளை அதிகப்படுத்தி இளம்வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம், கல்லீரல் செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக இம்மருந்து ஆண்களின் மார்பகங்களை வீங்க செய்து, விதையுறுப்புகளை சுருங்க செய்வதுடன் விந்தணுக்களை அழித்து மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. இதனால் மிஸ்டர் சென்னை, மிஸ்டர் நெல்லை கனவில் இருக்கும் பல இளைஞர்கள், திருமணவாழ்க்கையில் மனைவிக்கு மிஸ்டராகும் வாய்ப்பை நிரந்தரமாக  இழந்து பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும் இம்மருந்துகளை உபயோகிப்பதால் மனஅழுத்தம், மனஎழுச்சி, தற்கொலை எண்ணங்கள், செக்ஸ் பிரச்சினைகள் போன்ற மனநல பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். 

No comments:

Post a Comment